Friday, September 22, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 3

அசோக் நகர் சொர்ணாம்பாள் கொலு

சொர்ணாம்பாள்  தனலக்ஷ்மி அலங்காரம்

**********

இரண்டாவது ஆவரண கீர்த்தனம் 

ராகம்: கல்யாணீ                                                                                                            தாளம்: ஆதி

பல்லவி

கமலாம்பாம் பஜரே ரேமாநஸ கல்பித
மாயா கார்யம் த்யஜரே. (கமலாம்பாம்)

அனுபல்லவி
கமலா வாணீ ஸேவித பார்ஸ்வாம்
கம்பு ஜயக்ரீவாம் நததேவாம்

மத்யமம்
கமலாபுர ஸதநாம் மிருதுகதநாம்
கமநீய ரதநாம் கமலவதநாம் (கமலாம்பாம்)

சரணம்
ஸர்வாஸாபரிபூரக- சக்ர ஸ்வாமிநீம் பரமசிவகாமிநீம்
தூர்வாஸார்ச்சித குப்த- யோகிநீம் துக்க த்வம்ஸிநீம் ஹம்ஸிநீம்
நிர்வாண நிஜ ஸுக ப்ரதாயிநீம் நித்ய கல்யாணீம் காத்யாயநீம்
ஸர்வாணீம் மதுபவிஜய வேணீம் ஸத்குருகுஹ ஜநனீம் நிரஞ்சநீம்

மத்யமம்
கர்வித பண்டாஸுர பஞ்ஜநீம் காமா கர்ஷிண்யாதி ரஞ்ஜநீம்
நிர்விசேஷ சைதந்ய ரூபிணீம் உர்வீ  தத்வாதி ஸ்வரூபிணீம் (கமலாம்பாம்)


இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷிதர் அவர்கள்.

ஓ மனமே!  திருவாரூரில் குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய்வாயாக. மாயை விளைவிக்கும் ஆசை, பாசம்  ஆகியவற்றை துறப்பாயாக!

அலைமகளும் கலைமகளும் இருமருங்கிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும்  கழுத்தை உடையவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், கமலாபுரத்தில் கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளை முத்துக்கள் போன்ற  அழகிய பற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான திருமுகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்வாயாக.

ஸ்ரீவித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரக சக்கரத்தின் ஈஸ்வரியும், பரமசிவனின் மனதுக்குகந்தவளும், துர்வாச மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்தயோகினியாக இருப்பவளும், துயரங்களை துடைப்பவளும், அஜபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும், கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்தி நிலயை அளிப்பவளும், அழிவற்ற  மங்கல ஸ்வரூபிணி, காத்யாயினியாக அவதாரம் செய்தவளும், சர்வேஸ்வரனின் பட்ட மஹிஷியாக இருப்பவளும், கருவண்டுகளின் கருமையை மிஞ்சும் கருங்கூந்தலை உடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், மாசற்றவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும், காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும், விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்துவங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பிகையை துதி செய் மனமே.

இந்த இரண்டாவது ஆவரணம்  சோடஷ தள கமலம் ஆகும். இச்சக்கரம் சர்வாசாபரிபூரகம் என்பதாம். இதில் அட்டித்து விளங்கும் யோகினி குப்தயோகினி ஆவாள்.  திரிபுரேசி இச்சக்கரத்தின் நாயகி. அவஸ்தை ஸ்வப்னம் ஆகும். இதில் விளங்கும் சக்தி தேவதைகள்  காமாகர்ஷீணீ முதலிய  பதினாறு  ஆகர்ஷண சக்தியர் ஆவர். ஜீவாத்மாவின் கனவு நிலையையும் சூட்சும சரீரத்தையும் அதனால் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கின்றது. 

                                         முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Thursday, September 21, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 2புலியூர் பாரத்வாஜேஸ்வரர்  ஆலயம் 
சொர்ணாம்பாள் கொலு 
கண்ணாடி பல்லக்கில்  சொர்ணாம்பாள் 


ஸ்ரீசக்ர கோலம் 


சாரதா தேவி ஆலயம் 

கிரிக்கெட் போட்டி மகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள்
புவனேஸ்வரி அலங்காரம் 

* * * * * * * *
முதலாவது ஆவரண கீர்த்தனம்

ராகம் - ஆனந்தபைரவி                                                                               தாளம்- த்ரிபுட

பல்லவி

கமலாம்பா ஸம் ரக்ஷது  மாம்
ஹ்ருத் கமலா நகர நிவாஸிநீ.... (கமலாம்பா)

அநுபல்லவி

ஸுமநஸாராதிதாப்ஜமுகீ ஸுந்தர மந: ப்ரியகர ஸகீ
கமலஜாநந்த போத ஸுகீ காந்தா தார பஞ்ஜார ஸுகீ..... (கமலாம்பா)

சரணம்

த்ரிபுராதி சக்ரேஸ்வரீ  அணிமாதிஸித்தீஸ்வரி
நித்ய காமேஸ்வரி க்ஷிதிபுர த்ரைலோக்ய மோஹநசக்ர வர்த்திநீ
ப்ரகட யோகிநீ  ஸுரரிபு மஹிஷாஸுராதி மர்த்தினீ
நிகம புராணாதி ஸம்வேதினீ

மத்யமம் 

த்ரிபுரேசீ குருகுஹஜனனீ த்ரிபுர பஞ்ஜந ரஞ்ஜனீ
மதுரிபு ஸஹோதரீ தலோதரீ திரிபுர ஸுந்தரீ மஹேஸ்வரீ (கமலாம்பா)


அடியேன் மனத்துள்ளும் கமலாலயம்  என்னும்  திருவாரூரில் கோவில் கொண்டிருப்பவள், தூய உள்ளம் உடைய ஞானியர்களால் ஆராதிக்கப்படுபவள், தாமரை போன்ற திருமுகமுடையவள், சுந்தரேச்வரரின் உள்ளம் கவர்ந்தவள், தாமரைப்பூவினில் அமர்ந்து இருக்கும் லக்ஷ்மி தேவியின் ஆனந்தமான துதிகளினால் ஆனந்திப்பபவள், தரகம் எனப்படும் பிரணவாகாரத்தின் மண்டபத்தில் இருக்கும் கிளி போன்றவள் அந்த மஹிமை பொருந்திய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்.

மனித உடம்பில் இருக்கும் ஒன்பது சக்ர நிலைகளான திரிபுரா சக்கரம் முதல் ஸர்வாநந்தமய சக்ரம் வரை ஈச்வரியாக இருப்பவள், அணிமாதி போன்ற அஷ்டமாசித்திகளை அருளுபவள், பதினைந்து நித்யா சக்திகளான காமேஸ்வரி நித்யா சக்தி தொடங்கி சித்ரா நித்யா சக்தி வரையுள்ள அனைவருக்கும் ஈஸ்வரியாக விளங்குபவள், த்ரைலோக்ய மோஹன சக்ரத்தில் உள்ள பூபுரம் என்ற சக்ரமாக நிற்பவள். யோகினிகளில் பிரகட யோகினியாக இருப்பவள், தேவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளான மகிஷாசுரன் முதலான அசுரர்களை வதம் செய்தவள், வேதங்களாலும் புராணங்களால் மட்டும் அறியப்படுபவள், மனம் – புத்தி - ஸித்தி போன்ற மூன்று வகை சக்திகளுக்கு தலைவியாக உள்ளவள், குருகுஹனான கார்த்திகேயனின் தாய், திரிபுர சம்ஹாரத்தால் மனம் மகிழ்ந்தவள், மது என்ற அரக்கனை அழித்த விஷ்ணுவின் சகோதரி, உள்ளங்கை அன்ன வயிற்றினைக் கொண்டவள், திரிபுரமெரித்த விரிந்த சடையுடைய சசிசேகரனின் மனமகிழ் சுந்தரி, மஹேச்வரி இத்தகைய பெருமைகளையுடைய கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும்
.


ஸ்ரீ சக்ரத்தின் முதலாவது ஆவரணம் பூபுரம் ஆகும். மூன்று சதுரங்கள் கொண்டது. மூன்று சதுரங்களைக் கொண்டுள்ளதால் த்ரைலோக்யமோகன சக்கரம் ஆகும். இச்சக்கரத்தின் நாயகி திரிபுரா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி பிரகட யோகினி. அவஸ்தை ஜாக்ரம் ஆகும். இச்சக்கரத்தின் முதல் ரேகையில் அணிமா முதல்  பத்து சித்தி தேவதைகளும், இரண்டாவது ரேகையில் ப்ராஹ்மி முதல் எட்டு  மாத்ரு சக்திகளும், மூன்றாவது ரேகையில் சர்வசம்க்ஷோபனமாய்  திகழும் பத்து முத்ரா தேவதைகளும்  ஆக இருபத்தெட்டு தேவதைகள் மிளிர்கின்றனர். தேகம் ஸ்ரீசக்ரமாக பாவிக்கப்படும் போது முதல் ஆவரணம் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள் மனம் முதலியவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும்.  


                                         முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு


                                                                                   அன்னையின் நவராத்திரி  தரிசனம் தொடரும் . . . . . . 

Tuesday, September 19, 2017

ஸ்ரீசக்ர நாயகி-1

நவராத்திரி 

நவராத்திரி நாளை துவங்குகின்றது. வழக்கம் போல் அம்பாளின் பல்வேறு கொலு கோலங்கள் தினமும் பதிவிட உள்ளேன். இவ்வருடம் முத்துசாமி தீக்ஷிதரின் கமலாம்பாள் நவாவர்ண கீர்த்தனைகளை உடன் பதிவிட அம்பாள் உத்தரவு.  இக்கீர்த்தனைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன, அடியேன் அறியாத மொழி எனவே திரு, குமரன் அவர்கள் பதிவிட்டதை ஒட்டி எழுதியுள்ளேன். அவர்களுக்கு நன்றி.          இன்றைய தினம்             மஹாளய அமாவாசையன்று, நவாவர்ண கீர்த்தனையின் கணபதி தியானம் மற்றும் அம்பாளின் தியான கீர்த்தனைகள் இடம் பெறுகின்றன. சென்ற வருடம் திருமயிலை கற்பகாம்பாளின் கொலு தரிசனத்தையும் கண்டு அருள் பெறுங்கள். 

அன்னை ஸ்ரீசக்ர நாயகி , அச்சக்கரத்தில் ஒன்பது ஆவரணங்கள் எனப்படும்  சுற்றுக்கள் உள்ளன. எனவேதான் அபிராமி பட்டரும் அன்னையை "ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று போற்றினார்.  


சென்னை போக் சாலை 
முத்துமாரியம்மன் நவராத்திரி அலங்காரங்கள்

நவாவர்ண கிருதிகளை வரிசையாக இசைக்கும்போது ஆரம்பத்தில் இரண்டு  த்யான கிருதிகளை இசைப்பது ஒரு மரபு.

 முதலாவது கணபதி தியானம்
..
ராகம்-கௌளை                     தாளம்- திரிபுட

பல்லவி

ஸ்ரீமஹா கணபதி- ரவதுமாம்  ஸித்தி விநாயகோ மாதங்க முக (ஸ்ரீ)

அனுபல்லவி

காமஜனக விதிந்த்ர ஸந்நுத கமலாலய தட- நிவாஸோ
கோமளதர பல்லவபதகர குருகுஹாக்ரஜ சிவாத்மஜ: (ஸ்ரீ)

சரணம்

சுவர்ணாகர்ஷண விக்னராஜோ பாதாம்புஜோ கௌர வர்ண வஸநாதரோ பாலசந்த்ரோ நராதி விநுத லம்போதரோ
குவலயஸ்வவிஷாண -  பாசாங்குச மோதக ப்ரகாசகரோ
பவஜலதிநாவோ மூலப்ரக்ருதி ஸ்வபாவ சுகதரோ
ரவிஸஹஸ்ர ஸந்நிப தேஹோ கவிஜநனுத மூஷிகவாஹோ
அவநத தேவதா ஸமூஹோ அவிநாஸ கைவல்ய  தேஹ:  (ஸ்ரீ)

சகல சித்திகளையும் அருளச்செய்யும் யானைத் திருமுகம் கொண்ட ஸ்ரீ மஹாகணபதி என்னை காத்தருள வேண்டும்மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்படுபவர். திருவாரூர் திருத்தலத்தின்  கமலாலயக் குளக்கரையில் அமர்ந்திருப்பவர். அழகுமிக்க தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர். குருகுஹனான அழகு முருகனின்  மூத்தவன், பரமசிவனாரின் அன்பு மகன்.

சுந்தரருக்காக தங்கத்தை மாற்றுரைத்தவர். தாமரை பூக்களின்மீது நடனமாடுபவர், வெண்பட்டாடை அணிந்தவர், சிரசில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர் பெற்றவர், மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப்படுபவர், தன் வயிற்றினில் உலகனைத்தையும் அடக்கி அதனால் பெருவயிறு படைத்தவர், கைகளில் குவளை மலர்,  ஒடிந்த தந்தம், பாசக்கயிறு, அங்குசம், மோதகம், ஆகியவற்றை ஏந்தியிருப்பவர், எப்போதும் ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர், பிறவிப் பெரும் கடலை கடக்க மனிதர்களுக்கு தோணியாகி கரை சேர்ப்பவர், ஆதி முதற்காரணப் பொருளாக விளங்குபவர், வணங்கியவர்களுக்கு மங்களத்தை அளிப்பவர்கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர், மூஞ்சூறு வாகனர், தேவர் குழாங்களால் துதிக்கப்படுபவர், ஜீவாத்மா- பரமாத்மா உறவின் கடைசி நிலையான ஐக்கியத்தை அருள்பவர், இப்படியெல்லாம், புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டடும்.

பலஸ்ருதி: வினாயகப்பெருமானின் அருள் கிட்டும். தடைகள் தகர்ந்து நலம் பெருகும்.


கற்பகாம்பாள் அன்ன வாகன சேவை 

கற்பகாம்பாள் காமதேனு வாகனத்தில் 
மஹாகௌரி கொலு 

கற்பகாம்பாள் கம்பாநதி காட்சி 


இரண்டாவது  பாடல் அம்பிகை தியானப் பாடல்.  வழி வழியாக முதலில் பாடப்படும் பாடல்.

ராகம் -  தோடி                                                               தாளம் -  ரூபகம்

பல்லவி

கமலாம்பிகே அம்ப  ஆஸ்ரித  கல்ப லதிகே சண்டிகே
ஜகதம்பிகே கம நீயா ருணாம் ஸுகே
கர வித்ருத ஸுகே  மாமவ  ......கமலாம்பிகே

அனுபல்லவி

கமலாஸநாதி பூஜித கமலபதே பஹு வரதே
கமலாலய தீர்த்த வைபவே ஸிவே கருணார்ணவே  (கமலாம்பிகே)

சரணம்

ஸகல லோக நாயிகே சங்கீத ரசிகே
ஸுக வித்வ ப்ரதாயிகே ஸுந்தரி கதமாயிகே
விகளேபர முக்திதாந நிபுணே அகஹரணே
வியதாதி பூத கிரணே விநோத சரணே அருணே

மத்யமம்

ஸகளே குருகுஹ சரணே ஸதாஸிவாந்த:  கரணே
 பாதி வர்ணே அகண்டைகரசபூர்ணே (கமலாம்பிகே)

திருவாரூரில் புகழுடன் விளங்கும் கமலாம்பிகையே உன்னை அநந்யமாய் சரணடைந்தவர்களுக்கு கற்பகக் கொடியே!,            சண்டிகாதேவியே! , திருக்கரத்தில்   கிளியை ஏந்தி  எழில் மிளிரும் சிகப்பு பட்டுச்சேலை உடுத்தி அழகாக விளங்குபவளே, அகில உலகத்திற்கும் அன்னையே!  என்னை காத்தருள்வாயாக.

தாமரையில் தோன்றிய பிரம்மா முதலியவர்களால் பூஜிக்கும் தாமரைத் திருவடிகளை உடையவளே, பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அருள்பவளே, கமலாலயம் என்ற குளத்துக்கு சிறப்புச் சேர்ப்பவளே, சிவமாகும் மங்கல வடிவினளே, கருணைக் கடலே!  கமலாம்பிகையே என்னை காத்தருள்வாயாக.

சகல உலகங்களுக்கு நாயகியே, இசையை விரும்பி ரசிப்பவளே, கவித்துவ ஞானத்தை நல்குபவளே,   அழகியவளே, மாயையிலிருந்து விடுபட்டு இருப்பவளே, விதேக முக்தி அருளும் வல்லபம் உள்ளவளே! முப்பிறப்பிலும் செய்த பாவங்களை போக்குபவளே, பஞ்சபூதங்களுக்கும் சக்தியை அளிப்பவளே, ஒளி பொருந்தியவளே, விதவிதமாக ஆசனங்களை போட்டு கொலு வீற்றிருக்கும் போது விநோதமான திருவடிகளின் நிலைகளினால் அழகிய தோற்றம் தரும் பாதார விந்தங்களை  உடையவளே,  இளம் சிவப்பு வர்ணமுடையவளே

அனைத்துக் கலைகளுக்கும் உறைவிடமானவளே, குருவாய் வந்த முருகனின்  அன்னையே, என்றும் சதாசிவனின் உள்ளத்துள் உறைபவளே, அகார க்ஷகார முதலிய மாத்ருகா வர்ண சொரூபிணியே! ஒப்பற்ற ஆனந்தத்தின் பூரண வடிவாய் விளங்குபவளே, திருவாருரில் ஒளிர்பவளான கமலாம்பிகையே என்னைக் காத்தருள்வாய்.

காமகலா வடிவமாக விளங்கும் கமலாம்பிகையின் நிர்குண ஸ்வரூபம், சகுண நிராகாரம் முதலிய வடிவங்கள் இக்கீர்த்தனையில் விமர்சிக்கப்பட்டுள்ளன. அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . .