Sunday, May 10, 2009

திருக்காரணி வெள்ளி விருஷப சேவை -2

ஐந்தாம் நாள் மாலை வெள்ளி விருஷப சேவை

சிவாலயங்களில் ஐந்தாம் நாள் இரவு உற்சவம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் அன்று தான் மத்தமும் மதியமும், வன்னியும் கொன்றையும் சூடிய பொன்னார் மேனியர் சிவ பெருமான் தமது வாகனமான ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். உடன் மற்ற மூர்த்திகளும் தங்கள் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அம்மை பார்வதியும் சண்டிகேஸ்வரரும் ரிஷ்ப வாகனத்திலும் இன்று தரிசனம் தருகின்றனர்.

விநாயகர் ஆலயங்களிலும், அம்மன் கோவில்களிலும், முருகன் தலங்களிலும், கூட ஐந்தாம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் தரிசனம் தருகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஐந்தாம் நாள் இரவுஉற்சவத்தின் போது பஞ்ச அளிக்கும் அருட்தரிசனத்தை கண்டு களிக்கப் போகிறீர்கள் இப்பதிவில்.


மூஷிக வாகனத்தில் விக்னேஸ்வரர்

கணபதியின் வாகனம் மூஷிகம் என்னும் மூஞ்சூறு. கஜாமுக சூரனின் ஆணவத்தை அடக்கி அவனை சம்ஹாரம் செய்து( வதம் செய்யவில்லை ) வாகனமாகக் கொண்தார் விநாயகப் பெருமான். எவ்வாறு பெருச்சாளியானது எதையும் குடைந்து வழி ஏற்படுத்திக் கொள்வது போல குண்டலினி யோகத்தில் மூலாதாரத்தை அடைய வழி ஏற்படுத்தும் ஒரு ஆற்றலாக மூஷிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. மூலாதாரத்திற்க்கு அதிபதியான கணேசருக்கு மூஷிக வாகனம். தேடித் தேடி ஞானத்தை நாம் அடைய வேண்டும் என்பதையே மூஷிக வாகனம் குறிப்படுகின்றது.

முழு முதற்க் கடவுள் விக்ன நாயகன் முன்னே செல்ல அவருக்குப்பின் சோமாஸ்கந்த மூர்த்தமாக பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் சிவபெருமான் பின் செல்கின்றார். ஐயனின் மலர் அலங்காரம் பாருங்கள் இன்று மட்டும் இரட்டை அடுக்கு அலங்காரம். மற்ற நாட்களில் அன்பர்கள் தங்கள் தோளிலே தாங்கி ஏழப்பண்ணூகின்றனர், நள்ளிரவு தொடங்கும் ரிஷப சேவை மாட விதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடையும் போது அதிகாலை ஆகி விடும். நந்தி வாகனமே 9 அடி உயரம், அதற்கு மேல் பெரிய மாலைகளுடன் எம்பெருமான் பெரிய மலர் அலங்காரம். குடைகள், வாரையும் இன்று பெரிய வாரை. இத்தனையும் சேர்ந்து எவ்வளவு எடை இருக்கும் தாங்களே ஊகித்துக் கொள்ளலாம் இன்றும் பல் வேறு அன்பர்கள் இன்று ஒரு நாள் இரவு இத்திருக்கோவிலுக்கு வந்து எம்பருமானை தங்கள் தோள்களிலே தாங்கும் பக்தியை எவ்வாறு வர்ணிப்பது என்று தெரியவில்லை. அவர்கள் எல்லாருக்கும் சொர்ணாமிகை உடனுரை காரணீஸ்வரப் பெருமான் நல் அருளை வழங்கப் பிரார்த்திகின்றேன்.



வெள்ளி ரிஷபத்தில் எழிலாக காரணீஸ்வரப் பெருமான்

நீலமாமிடற்று பவளமா மலையே
காலன் நாண் அவிழ்க்கும் காலனே!

அதாவது யமன் வீசும் பாசக்கயிற்றின் முடிச்சை அவிழ்த்து மரணமில்லா பெருவாழ்வு நல்கும் கால காலன் இறைவன் சிவபெருமான்.

அந்த பசுவேறும் பரமனை, காம கோபனை, கற்பகத்தை, மாதொரு பாகனை, தர்மத்தின் சின்னமாம் வெள்ளை ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் போது தரிசனம் செய்ய பல ஜென்மங்களில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே ரிஷப வாகன சேவை சித்திக்கும். உண்மைதான் தாங்கள் மற்ற சேவைகளை பகல் நேரத்தில் தரிசிக்க வாய்ப்பு உள்ளது ஆனால் ரிஷப சேவை மட்டும் நள்ளிரவில் நடை பெறுவதால் அது அவர் அருள் இருந்தால் மட்டுமே சித்திக்கும்.

விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ்
சடையுடை யாய் கொன்றைத் தாருடை யாய் மழுப்
படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால்
நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குக.

என்று மால் விடை துவச்சதினரை வணங்குவோமாக.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

எல்லா மண்டலங்களிலும் ரிஷப வாகன சேவை பெரும் விழாவாகத் தான் கொண்டாடபடுகின்றது. தொண்டை மண்டலத்திலே மாபெரும் ரிஷப சேவை, பெருவெள்விடைக் காட்சி என்று அழைக்கப்பட்டால் இதே சோழ மண்டலத்தில் சகோபுர தரிசனம் என்றழைக்கப்பதுகின்றது அதுவே நடு நாட்டில் தெருவடைச்சான் சப்பரம் பெயர்கள்தான் வெவ்வேறு ஆனால் கொண்டாட்டம் ஒன்றுதான். அநேகமாக எல்லாத்தலங்களிலும் இன்றைய நாள் பஞ்ச மூர்த்திகளும் வாகன சேவை சாதிக்கின்றனர் என்பது சிறப்பு.

கழுத்தை திருப்பி எழிலாக ஐயனைத்தாங்கும் ரிஷபத்தின் அழகு

விடையேறு உணர்த்தும் தத்துவம்: காளை மாடுகள் எவ்வாறு வயல் வெளியில் ஒயாது உழைத்து உற்பத்தியான தானியங்களின் பயனை நமக்கு அளித்து விட்டு, நாம் ஒதுக்கும், உமி, தவடு, கழுநீர், வைக்கோல் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றதோ அது போல தியாகமும், உழைப்புமே இறைவனின் அத்யந்த விருப்பம் என்பது உணர்த்துகின்றது காளை வாகனம்.

எருதின் கட்டான உடல் திடமான மனதுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. கால்கள் எத்தனை சுமை இருந்தாலும் அதைத்தாங்கும் வல்லமை வேண்டும். காதுகள் எப்போது இறைவனின் நாமத்தை கேட்க வேண்டும் என்பதையும், கண்கள் நல்லவற்றையே காண வேண்டும் என்பதையும், ஆடும் வால் தீயனவற்றை தள்ள வேண்டும் என்பதையும், கழுத்தில் உள்ள மணிகள் இறைவனை மந்திரம் சொல்லி வழிபட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.


ரிஷப வாகன சேவை பின்னழகு


ரிஷப வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வது பெரிய புண்ணீயத்தைத் தரும் அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லோரும் கடைத்தேற இறைவனை அடைய குரு முக்கியம், அவ்வாறு குரு இல்ல்லாதாவர்களுக்கு வாகனமேறி ஐயன் அம்மை வரும் போது எந்த தகுதியும் இல்லாதாவர்களுக்கும் அவர் தீட்சை அளிக்கின்றார். இதற்கு சாம்பவி தீட்சை என்று பெயர். இறைவன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதால் இது உடல் சுத்தமல்ல, உள்ள சுத்தம் அதாவது மலம் நீங்கி ஜீவான்மாகிய பசு பரமாத்மாவாகிய பதியுடன் சேருவதை குறிக்கின்றது.




சிவசொர்ணாம்பிகையின் கோபுர வாசல் சேவை

அற்புதமான அலங்காரத்துடன் ரிஷப வாகனமேறி சாம்பவி தீட்சை வழங்க வரும் அன்னை சொர்ணாம்பிகையை பத்மராகம் சூட்டி வழிபடுவோம்.

பத்மராகம்
நமனை நசுக்கும் நாதகீதம்
நயந்து நானும் பெற்றிடவே
நலங்கொள் ஞாலந்தெளிவிக்கும்
நல்லாய் நடங்கொண் டாடுகின்ற


குமர மணியைக் குன்றமுறுங்
குறவர் கோவை நித்தியத்தை
குருவாய் யீந்தாய் குணக்குன்றே
குன்றாக் கனகக் குண்டலியே


வெமர வணியும் வார்குழலில்
வெதும்பா வண்ணப் பத்மராகம்
வெளியேன் சூட்ட விழைகின்றேன்
வெள்ளை உளஞ்செய் வாலையளே


அமரர் கயிலைப் பார்வதியே
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே (5)



தங்க முலாம் பெரிய மயில் வாகனத்தில்

எழில் குமரன் தேவியருடன்

சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

ந்தாம் திருநாள் உணர்த்தும் தத்துவம்: மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன. அவற்றை அடக்கி அவன் திருவடியில் சரணடைய அதுவே முக்தி.

உள்ளம் பெருங் கோயில்
ஊணுடம்பு ஆலயம் வள்ளல்
பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்

அதாவது நாம் நமது ஐம்புலன்களையும் ஒழுங்குபடுத்தி வாழும் போது அவை செய்யும் கள்ளத்தனமான செயல்கள் அனைத்தும் நீங்கி நாம் ஒளி விளக்காகத் திகழலாம். அப்படிப்பட்ட நிலையில் அவனுடைய ஜீவனே சிவலங்கமாகி விடுகின்றது.


No comments: