Thursday, May 7, 2009

திருக்காரணி சிவிகை

ஐந்தாம் நாள் காலை சிவிகை


சிவிகை உற்சவத்திற்க்கு புறப்படும் பஞ்ச மூர்த்திகள்

காரணீஸ்வரத்தில் ஐந்தாம் நாள் காலை உற்சவம் சிவிகைகள். பஞ்ச மூர்த்திகளும் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.


பல்லக்கை பார்க்கும் போது வளைந்த மூங்கில் ஞாபகம் வருகின்றது வளைந்த மூங்கில் இறைவனின் தலைக்கு மேலாக இருக்கின்றது, ஆனால் நெடிது உயர்ந்த மூங்கில் களைக் கூத்தாடியின் காலில் மிதி படுகின்றது. எனவே நாம் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதை பல்லக்கு உணர்த்துகின்றது.



யாக சலையின் முன் பஞ்ச மூர்த்திகள்

தினமும் காலையும் மாலையும் புறப்பாட்டிற்க்கு முன் அலங்காரம் முடிந்தவுடன் முதலில் பஞ்ச மூர்த்திகளுக்கு பூஜை நடைபெறுகின்றது. சகல தீப உபசாரம் முதலில், பின்பு சோடச உபசாரம், பின்பு வேதமும் தேவார திருவாசம் ஓதப்படுகின்றது.


பின்னர் பஞ்ச மூர்த்திகள் உட்புறப்பாடு கண்டருளுகின்றார், அதாவது திருக்கோயிலை வலம் வந்து யாக சாலையின் முன்னர் எழுந்தருளுகின்றார்கள் , கும்பத்தில் அரூபமாக எழுந்தருளியுள்ள இறைவனே வெளியே உருவமாக காட்சி தந்து கொண்டிருக்கிறார். பின் தீபாராதாணை நடைபெறுகின்றது.


யாக சாலையை விட்டு புறப்பட்டு வாகனத்தை அடைவதற்கு ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார் ஆடல் வல்லான். பாம்பு நடனம், காவடி சிந்து, இராஜ நடை, என்று எழிலாக திருக்காட்சி தந்த பின் வாகனத்திற்கு எழுந்தருளுகின்றார்கள் பஞ்ச மூர்த்திகள். வாகனத்தில் பின் அலங்காரம் ஆகி திரு வீதி உலாவிற்காக திருக்கோவிலை விட்டு வெளியேறும் போது கோபுர வாசலில் தீபாராதணை நடை பெறுகின்றது. கோபுர வாசல் தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஐதீகம்.


கோவிலின் வெளியே பின் மின் அலங்காரங்கம் செய்யப்ப்ட்டு திருவீதி உலா நடைபெறுகின்றது. பவனி முடிந்து கோவில் வாசலுக்கு ஐயன் வந்தவுடன் அவருக்கு அமுது படைக்கப்பட்டு கும்ப தீபாரதனை நடைபெறுகின்றது. பின்னர் வாகனங்களிலிருந்து இறங்கி அலங்கார மண்டபம் எழுந்தருளுகின்றனர் மூர்த்திகள்.



பல்லக்கில் காரணீஸ்வரர்

பல்லக்கு சேவையின் போது கண்ணாடி தரிசனம் அவசியம் சேவிக்க வேண்டிய ஒன்று. சுவாமி முன் கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும் அதில்தான் சுவாமியின் முழு தரிசனமும் பெற முடியும். இதிலும் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. நம் மனம் என்னும் கண்ணாடியில் ஆணவம், கன்மம், மாயை என்னும் அழுக்குகள் இல்லாமலிருந்தால் நாம் இறைவனை அங்கே காணலாம்.

காரணீஸ்வரப் பெருமான் கண்ணாடி சேவை

பாகம் பிரியா அம்மையுடன் காரணீஸ்வரர் கண்ணாடி சேவை

பல்லக்கில் சிவசொர்ணாம்பிகை

பல்லக்கில் சிவ சுப்பிரமணிய சுவாமி

சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் உச்சி காலத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கும் மஹா அபிஷேகம் நடை பெறுகின்றது. அலங்கார மண்டபத்தின் முகப்பில் பஞ்ச மூர்த்திகளுக்கும் ஏக காலத்தில் நதியாய் பாயும் திரவியங்களினால் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது

No comments: