Saturday, January 30, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 6

தங்க மயில் வாகன சேவை

முத்துக் குமார சுவாமிக்கு பிரம்மோற்சவம் தை மாதத்தில். தைபூசத்தையொட்டி 20 நாள் நிகழ்ச்சியாக வெகு பிரசித்தியாக நடைபெறுகின்றது. முதல் பத்து நாட்கள் தினமும் காலையும் மாலையும்முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் சேவைசாதிக்கின்றார். உடனே வன வள்ளியும் , கஜ வள்ளியும்பல் வேறுவாகனங்களில் சேவை சாதிக்கின்றனர். தைப்பூசத்தன்று இரவு கொடியிறக்கம் அதன் பிறது பத்து நாட்கள் மாலை வேளை உற்சவம் மட்டுமே. தெய்வயாணை மற்றும் வள்ளித்திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது.

மூஷிக வாகனத்தில் முதல்வன் விநாயகர்

மயில் வாகன சேவைக்கு புறப்பாடு கண்டருளும்
முத்துக்குமார சுவாமி

முன் ஒரு பதிவில் எழிலாக முந்திரி மாலையில் தரிசனம் தந்த அழகனை கண்டீர்கள் இன்றைய தினம் என்ன மாலை என்று தெரிகிறதா?

படத்தைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.

ஆம் ஏலக்காய், கிராம்பு, மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றும் கலந்து இந்த மாலை அணிந்து வாசனைப்பொருட்கள் வியாபாரிகளுக்கும் நமக்கும் அருள் பாலிக்கின்றார் கந்த கோட்டம் முத்துக் குமார சுவாமி.


முத்துக்குமார சுவாமி பின்னழகு

எல்லா பிரம்மோற்சவங்களிலும் ஐந்தாம் திருநாள் இரவு மிகவும் சிறப்பானது அன்றைய தினம் சிவாலயங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மற்றும் அன்றைய தினம் தான் பஞ்ச மூர்த்திகள் தங்கள் தங்கள் வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மேலே தாங்கள் பார்த்த விநாயகரின் மூஷிக வாகன சேவையும் அடுத்து காணும் சந்திரசேகரின் விருஷப வாகன சேவையும் இவ்வாறு அமைந்தவையே. சிறப்பு நாள் என்பதால் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருக்கின்றனர் ஆகவே இன்றைய தினம் முருகரின் பின்னழகையும் தரிசனம் செய்கின்றிர்கள்.

சந்திர சேகரர் விருஷப வாகன சேவை

தைப்பூச பிரம்மோற்சவத்தின் போது இவ்வாறு அருள் வழங்குகின்றார் முத்துக்குமார சுவாமி. முதல் நாள் காலை கொடியேற்றம், சவுடல் விமான சேவை. மாலை கற்பக விருக்ஷ சேவை. இரண்டாம் நாள் காலை நூதன இரட்டைத்தலை சிம்ம வாகன சேவை, மாலை தங்க முலாம் சிம்ம வாகன சேவை. மூன்றாம் நாள் காலை புருஷா மிருக வாகனத்தில் பாரி உலா சேவை, மாலை தங்க முலாம் சூரபத்ம வாகன சேவை. நான்காம் நாள் காலை மேஷ வாகன சேவை, மாலை தங்க முலாம் நாக வாகன சேவை, ஐந்தாம் நாள் காலை தேவேந்திர மயில் வாகன சேவை, மாலை பஞ்ச மூர்த்திகளுடன் தங்க மயில் வாகன சேவை, பஞ்ச மூர்த்திகள் கற்பூர கிளை தீபாராதானை. ஆறாம் நாள் காலை சிவிகையில் மோகினி திருக்கோலத்தில் சூர்ணோற்சவம், மாலை தங்க முலாம் யாணை வாகன சேவை.






ஏழாம் நாள்

ஆகாத தீவினைகள் அத்தனையும் போக்கி அன்பர்க்கு

ஏகாந்த சேவை நல்க இன்றுதான் எண்ணினையோ!

நாகாதிபன் விரும்பும் நல்ல சென்னை மாநகரில்

žகாழி அந்தணனை தேரின் மிசை கண்டேனே!

என்று வண்ண சரபம் தண்டபாணி சுவாமி பாடிய சிறப்புடைய இரதோற்சவம் . (கந்த சுவாமி மயில் மீதும் தேரின் மீதும் தண்டபாணி சுவாமிக்கு காட்சி தந்துள்ளார்.) மாலை சிறப்பு அலங்காரத்துடன் முத்துக்குமார சுவாமி திருக்கோவிலுக்கு புறப்பாடும் பின் அபிஷேகமும் நடைபெறுகின்றது. எட்டாம் நாள் சூளையில் பார் வேட்டைக்கு போகுதல் மாலை குதிரை வாகனத்தில் பார் வேட்டை. ஒன்பதாம் நாள் காலை பதினாறு கால் விமான சேவை இரவு சண்முகசாமி திருக்கல்யாணம் மற்றும் கயிலாய பர்வத ரதோற்சவம், பிரம்மன் தேர் சாரதியாக திகழ, சிவபெருமானும் , அம்பிகையும் இரு புறமும் உடன் வர சண்முகர் கைலாய பர்வத இரதத்தில் வீதி உலா வருகிறார். பத்தாம் நாள் தைப்பூசத்தன்று பழனியாண்டவர் விமானத்திலும், முத்துகுமார சுவாமி தங்க தொட்டியிலும் சேவை சாதிக்க்கின்றனர். மாலை துவஜாரோகணம்.



தங்க மயில் வாகனத்தில் அருள் பாலிக்கும்
முத்துகுமார சுவாமி




கான மயிலின் பின்னழகு


பதினோறாம் நாள் உற்சவர் தங்கத் தொட்டியில் எழுந்தருளி முத்தியாலுப்பேட்டை கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு காலை எழுந்தருளும் சுவாமி மாலை தெப்பல் உற்சவம் கண்டருளி திரும்பி வருகிறார். பன்னிரெண்டாம் நாள் மாலை பழனியாண்டவருக்கு உபநயன உற்சவம், நூதன 16 கால் ஸ்கந்த கிரி விமானத்திலும், உற்சவர் இரத்தின செட்டியார் பாரியாள் அபரஞ்சி அம்மாள் கண்ணாடி பல்லக்கு சேவை. பதிமூன்றாம் நாள் மாலை , தேவேந்திர போஹம், நு‘தன மங்களகிரி விமானத்தில் தேவ சேனாபதியாக பட்டாபிஷேகம், பதினான்காம் நாள் மாலை தெய்வயானை திருக்கல்யாணம் பின் வெள்ளை யானை வாகனத்தில் புறப்பாடு, இவ்வாகனத்தின் தும்பிக்கை, காதுகள் மற்றும் வால் ஆடுவது போல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பதினைந்தாம் நாள் காலை வெள்ளியங்கிரி விமானத்தில் இராயபுரம் எழுந்தருளுகின்றார் உற்சவர் . மாலை வேடர் பறி உற்சவம். பதினாறாம் நாள் வள்ளியம்மை திருக்கல்யாணம், மயில் வாகன சேவை மற்றும் திருவூடல் உற்சவம். பதினேழாம் நாள் காலை கந்தப்பொடி உற்சவம், மாலை தவன உற்சவம். பதினெட்டாம் நாள் மாலை ஆறுமுக சுவாமி பவழக்கால் விமானத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு. பத்தொன்பதாம் நாள் மாலை உற்சவருக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் . விடாயாற்றி முடிந்து சங்காபிஷேகம் கண்டருளி நூதன சலவைக் கற்கள் அமைந்துள்ள ஆஸ்தானத்திற்கு உற்சவர் எழுந்தருளுகின்றார். மறு நாள் விஸ்வரூப தரிசனம், மதியம் உற்சவர் ரகஸ்ய அபிஷேகம் என வெகு சிறப்பாக வேத பராயணம், தேவார, திருவாசக, திருப்புகழ், தெய்வ மணி மாலை பாராயணத்துடன் வெகு சிறப்பாக தைப்பூச பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.



பச்சை மயில் வாகனத்தில் வள்ளி
தெய்வாணை அம்மையர்


வெளிப்பந்தலில் பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாள் வாகன சேவையும் ஒவியமாக வரையப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளன. நேரில் பார்க்க முடியாதவர்களும் எம்பெருமானின் பல்வேறு வாகன சேவையை காணவேண்டும் என்பதாலோ இவ்வாறு அமைத்துள்ளனர். பிரம்மோற்சவ காலங்களில் வெளியே பந்தலில் மாட்டப்படும் இந்த தஞ்சாவூர் சிற்பங்கள் மற்ற காலங்களில் குளக்கரை மண்டபத்தில் மாட்டப்பட்டுள்ளன.

இப்பதிவில் தாங்கள் காணும் படங்கள் எல்லாம் ஐந்தாம் திருநாள் மாலை உற்சவத்தின் காட்சிகள் ஆகும். பஞ்ச முர்த்திகளுடன் தங்க மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தரிசனம் தருகின்றார். முத்துக்குமார சுவாமி. இந்த வருடம் ஐந்தாம் திருநாள் தைக்கிருத்தி்கையுடன் சேர்ந்து வந்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. அன்பர்கள் அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்.

No comments: