Saturday, March 20, 2010

திருமயிலை கபாலீச்சுரம் -2

ஆடும் மயிலாய் உருவெடுத்து அர்சித்த நாயகி கற்பகாம்பாள்

நவராத்திரி கொலு தர்பார் காட்சி

முதற்பதிவில் மயிலாப்பூரின் பல்வேறு நாமங்களையும் அதற்கான காரணங்களையும் கண்டோம். இப்பதிவில் திருமயிலாப்பூர் என்னும் திருநாமம் வரக்காரணமான அம்மையப்பரின் திருவிளையாடளையும், இத்திருவிளையாடல் பல் வேறு இடங்களில், நிகழ்ச்சிகளில் எப்படி இடம் பெறுகின்றது என்பதையும் காணலாம் அன்பர்களே.


ஒரு தூண் சிற்பத்திலே முழுக்கோவில்

ஒரு தூணின் ஒரு பக்கத்திலே இத்தலத்தையே சித்தரித்துள்ள சிற்பியின் திறமையை என்ன என்று சொல்ல, திருமயிலையின் கிழக்கு கோபுரம் 7 நிலை நெடிதுயர்ந்த இராஜகோபுரம். மேற்கு கோபுரம் மூன்று நிலை சிறிய கோபுரம். இந்த தூண் சிற்பத்தின் மேல் பகுதியில் 7 நிலை இராஜ கோபுரத்தையும் கீழ் பகுதியில் மூன்று நிலை இராஜ கோபுரத்தையும் காண்கின்றீர்கள். மேலும் புன்னை மரத்தடியில் ஈசனை அன்னை அர்சிக்கும் காட்சியையும் காண்கின்றீர்கள். இன்னும் ஒரு நுணுக்கமும் உள்ளது இச்சிற்பத்தில் மேற்கு கோபுரத்தில் நுழைந்தவுடன் ஐயனின் திருமுக தரிசனம் கிடைக்கும் என்பதையும், கபாலீஸ்வரப்பெருமானின் அருவுருவ லிங்கத்திருமேனி சத்யோஜாதம் எனப்படும் மேற்கு நோக்கிய திருமேனி. இத்தி்ருமேனியில் தாரை ஐயனின் வலப்பக்கம் இருக்கும், இச்சிற்பத்திலும் சிற்பி அவ்வாறே வடித்துள்ளார். இச்சிற்பத்தை நவராத்திரி மண்டபத்தின் ஒரு தூணில் காணலாம்.



இந்த சிற்பத்திலே ஐயனின் திருமேனி சத்யோஜாத மேனி, மேலே உள்ள மலர் மாலை, மயிலுருவில் சிவ பூஜை செய்யும் அன்னையின் அலகில் உள்ள புன்னை மலர், புன்னை மரத்தின், இலை, மலர்,காய், வணங்கி நிற்கும் அன்பர்கள் அனைவருமே அப்படியே தத்ரூபம், அன்று நடந்ததை இன்று நம் கண் முன் கொண்டு வந்து காட்டும் அற்புத நிவந்த கல்வெட்டின் சிற்பம். அன்னை கற்பகாம்பாளின் சன்னதிக்கு முன்னர் இச்சிற்பத்தைக் காணலாம்.




கருணைத்தெய்வம் கற்பகாம்பாள் மாதா மாதம் நிறை வெள்ளியன்று ஊஞ்சல் சேவை தந்தருளும் ஊஞ்சல் மண்டபத்தில் ஒரு தூணில் உள்ளது இச்சிற்பம். இவ்வாறு சிற்பிகள் செதுக்கிய இவ்வரலாறு என்ன, இத்தலம் மயிலாப்பூர் என்றழைக்கப்படும் காரணம் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா? அந்த அம்மையப்பரின் நாடகத்தை கீழே காணுங்கள்.


ஒரு சமயம் பக்திப் பனியாய்க் கவிந்து இப்பாருலகத்தை காக்கும் பரமனுலகாம் கயிலங்கிரியில் சிவபெருமான் அம்மை பார்வதிக்கு, மலை மகளுக்கு, கௌரிக்கு, உமையம்மைக்கு ஓங்காரத்தின் தத்துவத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார், அப்போது அம்மை அங்கு ஆடிக் கொண்டிருந்த மயிலை ஆர்வத்துடன் நோக்க கோபம் கொண்ட ஐயன் அம்மையை பூவுலகில் சென்று மயிலாக பிறக்குமாறும் தக்க சமயத்தில் வந்து ஆட்கொள்வதாகவும் கூறினார். அம்மையும் மயிலாப்பூர் வந்து புன்னை வனத்தில் புள்ளி மயில் உருவில் மாசக்தி அன்னை பிரணவ வடிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கயிலை நாதராம் சிவபெருமான் அன்னை இல்லாமல் தவித்தார் சக்தி இல்லாமல் சிவம் ஏது, அவரே இப்பூவுலகம் வந்தார். ஒரு புன்னை மரத்தடியில் சிவலிங்க உருவுடன் அமர்ந்து அன்னையின் பூஜைக்காக காத்துக்கொண்டிருந்தார். மயில் உருவில் இருந்த அன்னை வாவியில் நீராடி ,தன் அலகினால் புன்னை மலர்களை எடுத்து சிவலிங்கத்தை சுற்றி வந்து அலகிலிருந்த மலர்களை இறைவனுக்கு அர்ச்சனை செய்து பூஜை செய்தாள் அம்மையின் பூஜையினால் பிரசன்னமான ஐயன் அம்மையை ஆட்கொண்டு இருவரும் அத்தலத்திலேயே , அம்மை வேண்டுவனருக்கு வேண்டும் வழங்கும் கற்பகாம்பாளாகவும், ஐயன் பிச்சாண்டியாக கபால நாதனாக கபாலீசுவரராகவும் திருக்கோவில் கொண்டனர். இப்பூவுலகத்தில் மாந்தர்களை உய்விக்க அம்மையும் ஐயனும் ஆடிய இந்த நாடகத்தை


ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள்

நாடி அர்சித்த நாயகியாம் நின் நின் நாமங்களைப்

பாடி உருகிப் பரவிப் பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய்

காடெனவே பொழில் சூழ் மயிலாபுரி கற்பகமே!


என்றுப் பாடிப் பரவுகின்றனர் அடியார்கள்.


புன்னை வன நாதர் சன்னதி


திருக்கோவிலின் தலமரமான புன்னை மரத்தின் நிழலில் அமைந்துள்ளது புன்னை வன நாதர் சன்னதி. இச்சன்னதியில் அன்னை சிவ பூஜை செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். பழமை வாய்ந்த இம்மரத்தில் மஞ்சள் சரடு கட்டி மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தொட்டில் கட்டில் குழந்தை பாக்கியம் வேண்டியும் அம்மையப்பரை வணங்குகின்றனர் பக்தர்கள்.


மயில் உருவில் அன்னை


பூத்துக்குலுங்கும் புன்னை மரம்


பங்குனி பௌர்ணமியின் போது திருக்கல்யாணத்திற்கு முன்பு இந்த மயிலாப்பூர் ஐதீகம் புன்னை வன நாதர் சன்னதியில் அரங்கேறுகின்றது. ஐயன் மண்டபத்திலி்ருந்து( திருக்கயிலாத்திலிருந்து) கிளம்பி வந்து அன்னை மயிலுருவில் பூஜை செய்யும் அழகை பார்த்து சொக்கி நிற்கின்றார். அன்னைக்கு தீபாராதணை ஆனவுடன் திரைச்சீலை விலக அங்கே புதுமணப்பென்ணாக சுய உருவில் கற்பகாம்பாள் அருட் காட்சி தருகின்றாள். அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் அன்னை ஐயனை சுற்றி வந்து வணங்க பின்னர் இருவருமாய் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளி நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.


மேலே கற்சிற்பங்களின் அம்மையப்பரின் நாடகத்தை கண்டு களித்தோம் இனி சுதை சிற்பங்களில் அதைக் கண்டு மகிழ்வோமா?




வாணியர் மண்டபத்தின் சுதை சிற்பம்



இராஜ கோபுரத்தின் சுதை சிற்பம்



மேற்கு கோபுர வாயிலில் நுழைந்தவுடன் தரிசிக்கும் சுதை சிற்பம்


அம்மையப்பரின் இந்த நாடகத்தால் இரண்டு பெருமைகளைப் பெற்றது. ஒன்று தொண்டின் பெருமை, இன்னொன்று இல்லை எனாது யாவர்க்கும் கற்பகமாய் அன்னை அருள் வழங்கும் பெருமை.


இனி மயிலாப்பூர் என்ற பெயர் வரக்காரணம், அம்மை மயிலாக பூசை செய்ததால் மயிலை என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் புன்னை வனத்தில் மயில்கள் நிறைந்திருந்து மயில்கள் அகவிய வண்ணம் இருந்ததால் மயிலாப்பு என்று திருநாவுக்கரசரால் அழைக்கப்பட்டு இன்றைக்கு மயிலாப்பூர் என்று அழைப்படுகின்றது என்போரும் உண்டு. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த கிரேக்க அறிஞர் தாலமி (காலம் கி.பி 119 -கி.பி 161) இத்தலத்தை தமது பயண நூலில் மலியார்பா என்று குறிப்படுகின்றார் "வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம் வருவாரை யெதிர் கண்டோம் மயிலாப்புள்ளே என்று” அப்பர் பெருமான் பாடியுள்ளார். 5ம் நூற்றாண்டில் திருமழிசை ஆழ்வார் "மாமயிலை" என்றும், 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் "மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை" என்றும், திருமழிசை ஆழ்வார் "மாடமாமயிலை" என்றும் குறிப்பிடுகின்றார்.




பங்குனிப்பெருவிழாவின் முதல் நாள் இரவு ஐயன் ஸ்தல விருட்சமான புன்னை மர வாகன சேவை தந்தருளுகின்றார். அப்போதும் அன்னை மயிலுருவில் சிவ பூஜை செய்யும் கோலத்தில் கபாலீஸ்வரப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோலம். முன்னே மயிலைக் காண்கிறோம். பின்னே உள்ளுறைப் பொருளாய் அன்னை. சகல ஜீவராசிகளிலும் உறைபவள் அவள் தான் என்பதை உணர்த்தவா இந்த நாடகம் நடந்தேறியது.


அன்னை சிவபூஜை செய்யும் ஓவியம்


திருஞான சம்பந்தரின் பதிகங்கள் மற்றும் திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலியவற்றில் கபாலீச்சுரம் முற்காலத்தில் கடற்கரையோரம் இருந்திருக்கின்றது என்று தெரிகின்றது, கடல் கொண்டதாலோ அல்லது போர்ச்சுகீசிரியர்கள் காலத்தில், (1565 ல் போர்ச்சிக்கீசியப் போரில்) அவ்வாலயம் அழிக்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.



மின் விளக்கு ஒளியில்


சாந்தோம் தேவாலயத்தில் 1923ம் ஆண்டில் நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியின் போது புராண திருக்கோவிலின் தூண்கள் மற்றும் இராஜ இராஜ சோழரின் சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போதைய கோவிலின் தூண்கள் விஜய நகர பாணியில் உள்ளன.


திருமயிலை பெருமைகள் வளரும்

2 comments:

Lydia said...

Nice photography blog.You have beautifully maintained, you must tried this website which really helps to increase your traffic. hope u have a wonderful day & awaiting for more new post. Keep Blogging!

S.Muruganandam said...

Thank you Lydia