Wednesday, August 11, 2010

திருமயிலை கபாலீச்சுரம் - 7

கபாலீஸ்வரர் உற்சவர்


ஐயன் சன்னதிக்கு செல்வதற்கு முன்னால் பலி பீடத்தில் நமது ஆணவம் , அகங்காரம் முதலிய மலங்களை பலியிட்டு தூய மனதுடன் பக்தியுடன் செல்லவேண்டும் என்பதை உணர்த்தவே பலிபீடம் கோவில்களில் கொடிமரத்துடன் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன. தனி சன்னதியில் நந்தி தேவரை வணங்கி பின் துவார பாலகர்களிடம் அனுமதி வாங்கி ஐயன் சன்னதியில் நுழைகின்றோம், படிகளில் ஏறும் பொழுதே ஐயனின், அந்த வென்று வரு சூரனை கொன்று பகவான் சிறை விடுத்த வீரனை, மயூரனை, சிங்கார வேலனை வியந்தளித்த அருள் தெய்வமாம் கற்பக நாதனின், கபாலீஸ்வரரின் முழு தரிசனம் நன்றாக கிடைக்கின்றது, அந்த் சர்வேஸ்வரனை, நீலகண்டனை, அம்மை கற்பகவல்லி நேசனை, காமனை கண்ணால் எரித்த மஹேஸ்வரனை, பிரம்மன் சிரம் கொய்து கபாலமேந்திய கபாலியைக் கண்ணார கண்டு வணங்குகின்றோம், மனது தானாகவே சிவ புராணம் சொல்லத் தொடங்கிவிட்டது. ஐயன் லிங்க ரூபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஆவுடை வட்ட வடிவம், தாரை வலப்பக்கம், மேற்கு நோக்கிய சத்யோஜாத மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கிறார் ஐயன் இத்தலத்தில் எனவே அவரை

ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம: பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:


என்னும் பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்து வணங்குகின்றோம்.




ஐயனை மனதார வணங்கி சன்னதியை வலம் வரும் போது கிழக்கு நோக்கி வல்லி தேவசேனா சமேத சிங்கார வேலவர் உற்சவர் சன்னதி , தெற்கு நோக்கி சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதி, பன்னிருதிருமுறைக் கோவில், மாணிக்க வாசகர், வியாக்ரபாதர். பதஞ்சலியுடன் அருட்காட்சி தருகின்றார் ஆனந்த நடராஜ மூர்த்தி. அதற்கடுத்து மற்ற உற்சவர்கள் கிழக்கு நோக்கி சந்திரசேகரர் அம்பாளுடன், ஆதி சோமாஸ்கந்தர், தேவியர் இருவருடன் மயில் மேல் அமர்ந்த ஷண்முகர், பிக்ஷாடனர் அம்மையுடன், மான் மற்றும் குண்டோதரர்கள் (பூத கணங்கள்) அற்புதம், அடுத்து அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஆதி நடராஜர், பின் அறுபத்து மூவர்களின் செப்புத்திருமேனிகள், அஸ்திர தேவர், அருணகிரிநாதர் முதலியோரின் தெய்வ மூர்த்தங்கள் ருத்ராக்ஷ மண்டபத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.





ஐயன் சன்னதியின் சுவற்றிலும் அருமையான தூண் சிற்பங்கள், வடக்கு கோஷ்டத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மனும் சிறந்த வரப்பிரசாதி, இராகு காலங்களில் அம்மனின் சன்னதியில் எலுமிச்சை விளக்குப் போட்டால் கேட்டது நடைபெறுகின்றது. ஏழு வாரம் தொடர்ந்து துர்க்கா பூஜை செய்து வந்தால் வேண்டிய குறைகளையெல்லாம் அம்பிகை தீர்த்து வைக்கிறாள் அடுத்த கோஷ்டத்தில் பிரம்மா. கோமுகி மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி வடக்குப் பக்கம் அமைந்துள்ளது. உற்சவர்கள் சன்னதி முடிந்தவுடன், கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் சன்னதி, நாகங்கள். பைரவர், வீரபத்திரர் சைவ சமயக் குரவர்கள் நால்வர் திருமூர்த்தங்கள், மேற்கு நோக்கி பொள்ளாப் பிள்ளையார், அறுபத்து மூவரின் மூலவர்கள், திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தர மூர்த்தி நாயனார் , அவர் பாடிய வரிசைப்படி தில்லை வாழ் அந்தணர், திருநீலகண்டத்து குயவனார் தொடங்கி, சடையனார் இசை ஞானியார் ஈறாக அமைந்துள்ளனர் அறுபத்து மூவர் திருமூர்த்தங்கள். இவர்களுடன் சூரியன். பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர். வடக்கு நோக்கியும் அறுபத்து மூவர்கள் தொடர்கின்றனர், சந்தான குரவர்கள் உமாபதி சிவம், மறை ஞான சிவம், அருணந்தி சிவம், மெய்கண்ட சிவம் ஆகியோர்களின் மூர்த்தங்களும் உள்ளன. தெற்கு கோஷ்டத்தில் ஆலமர் கடவுள் மற்றும் செல்வ கணபதி.

கிழக்கு நோக்கி தனி சன்னதியில் கற்பகாம்பாள் மற்றும் கபாலீஸ்வரர் (சோமாஸ்கந்தர்) உற்சவ மூர்த்திகளின் சன்னதி அன்னையின் பொற்பாதங்களையும் அங்குச பாசத்தையும் அபய வரத ஹஸ்தங்களையும் அற்புத தரிசிக்கலாம். நடுவில் பிரதோஷ நாயகர். ஐயன் கபாலீஸ்வரர் அழகிய சிம்மாதானத்தில் அழகிய பல வர்ண மலர் அலங்காரத்துடன் அற்புதமாக கந்தனுடனும் உமை அம்மையுடன் எழிலாக அருட்காட்சி தருகின்றார். பிரம்மோற்சவ காலங்களில் செய்யப்படும் அலங்காரம் போல இல்லாமல் எளிதாக இருந்தாலும் இந்த அலங்காரமும் அழகே. இப்பொழுது தினமும் இந்த பல வர்ண மலர்களால் அலங்காரம் செய்யப்படுகின்றது ஐயனுக்கு. பின்னும் கபாலீஸ்வரர் சன்னதியின் முன் வந்து நின்று

மயிலையிலே கோயில் கொண்டு அருள் பாலிக்கும் கயிலை நாதனை

சீர்கொண்ட கங்கையும் திங்களும் கொன்றையணி திகழ் கங்கையழகும் சிலைமதனை வென்ற வழிவலரு மிருதுனுதலினிற் திரிபுண்டரத்தினவழகும்

பார்கொண்டதிரு வயற்றரசி கற்பகவல்லி பாதத்திருக்குமழகும் பாதவிரு போதமகும் ஏழையேன் கண்டு முற்பழ வினையொழிப்பதென்றோ

காண்கொண்ட விடமுண்ட கண்ட நீலா இரு கரத்தொரு கபால சூலா கனமூலா
கமநாலா மறைமேலாகிய சீலா களியுடனாடுகாலா

ஆர்கொண்ட கொள்கில்லுமுரிய கோலா சச்சிதானந்தமான லீலா அருமையடியார் நேச திருமயிலையூர் வாச அருள்புரி கபாலீசனே!


என்று மனமுருகப் கபாலீஸ்வரர் அஷ்டகத்தின் ஒரு பாடலை மனமுருகிப் பாடி கற்பூர ஆரத்தியுடன் தரிசித்து அவர் அருள் பெற்று இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் பெருமையையும் சிறப்பையும் காணச்செல்வோம் வாருங்கள்

2 comments:

Test said...

//ஐயன் சன்னதிக்கு செல்வதற்கு முன்னால் பலி பீடத்தில் நமது ஆணவம் , அகங்காரம் முதலிய மலங்களை பலியிட்டு தூய மனதுடன் பக்தியுடன் செல்லவேண்டும் என்பதை //உணர்த்தவே பலிபீடம்//

இன்று தான் தெரிந்து கொண்டேன் :)

கபாலீஸ்வரர் சன்னதியை ஒருமுறை வலம் வந்தது போல் உள்ளது இந்த பதிவு,

பலிபீடம் > கொடிமரம் > துவார பாலகர்கள் > சிங்கரவேலரில் தொடங்கி கற்பகாம்பாள் மற்றும் கபாலீஸ்வரர் (சோமாஸ்கந்தர்) உற்சவ மூர்த்திகளின் அனைத்து உற்சவர்களயும் ஒருசேர தரிசித்த திருப்தி ஏற்ப்படுள்ளது.

பதிவிற்கு நன்றி கைலாஷி ஐயா...

S.Muruganandam said...

வாருங்கள் Logan ஐயா, அருமையாக கற்பகவல்லி - கபாலீஸ்வரர் தரிசனம் செய்ததற்கு நன்றி. இன்னும் தொடரும் பதிவுகளையும் கண்டு ஆனந்தம் பெறுங்கள்.