Sunday, May 12, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -36


ரிஷிகேசத்திலிருந்து கோவிந்த்காட் பயணம்


செல்லும் வழியில் இயற்கை வளம் 

அதிகாலை 5.30 மணிக்கு பேருந்து என்பதால் மீண்டும் காலை 4 மணிக்கு எழுந்து கங்கையில் சென்று நீராடி விட்டு பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள கோவிந்த்காட்டிற்கான ( Govindghat) பயணத்தை சாந்தி குஞ்ச் என்ற பெருந்து நிறுத்ததில் இருந்து தொடங்கினோம். காலை சிற்றுண்டியை தேவ பிரயாகையிலும், மதிய உணவை பீபல்கோட்டிலும் முடித்துக்கொண்டோம். வழியல்  No race No rally Enjoy the beauty of the valley  என்று ழுதியிருந்தபடி சமவெளியின் அழகை இரசித்துக்கொண்டே, பிராயாகைகளையும் தரிசனம் செய்து கொண்டே ஜோஷிர்மட்டை அடைந்த போது  வண்டி பழுது ஆனதால் சிறிது நேரம் வண்டி நின்றது அப்போது பவிஷ் பத்ரி செல்லும் பாதை கண்ணில் பட்டது,  முடிந்தால் பஞ்ச பத்ரிகளை இந்த வருட யாத்திரையில் தரிசனம் செய்யலாம் என்ற எண்ணம் மனதில் அப்போது  உருவாகியது அதற்காக பெருமாளிடம் பிரார்த்தித்துக்கொண்டோம். ஜெய(யானை), விஜய (குதிரை )பர்வதங்களை படம் எடுத்தோம். அலக்நந்தாவின் மறு கரையில் உள்ள இந்த இரண்டு மலைகளுக்கு நடுவேதான் பத்ரிநாத் செல்லும் பாதை செல்கின்றது இந்த மலைகள் ஒன்று சேரும் நாளில் நாம் பத்ரிநாதரை பவிஷ் பத்ரியில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஐதீகம் மனதில் தோன்றியது. இந்த வருடம் பெயர்ப் பலகைகளில் ஊரின் பெயருடன் அதன் உயரமும் எழுதியுள்ளனர் என்பதை கவனித்தோம். 

 வழியில் நிலச்சரிவால் ஒரு சிறு தடங்கல்

இவ்வாறாக  அதிகாலையிலிருந்து  பகல் பொழுது முழுவதும் சுமார் 270 கி.மீ தூரம் பயணம் செய்து கொண்டே வழியெங்கும் எண்ணற்ற அருவிகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும், பிரிட்டிஷ் காலத்திய இரும்பு பாலங்களையம், இக்காலத்திய விசாலமான கான்க்ரீட் பாலங்களையும் கடந்து   மாலை சுமார் மணி அளவில் ஜோஷிமட்டிலிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள  கோவிந்த்காட் என்னும் தலத்தை  வந்து அடைந்தோம்.  பாதை முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவின் காரணமாக சேறும் சகதியுமாக  ஒரு வழிப்பாதையாக்த்தான் இருந்தது. மிகவும் மெதுவாகவே பயணிக்க முடிந்தது சில இடங்களில் நிலச்சரிவுகள்  சரிசெய்யப்பட்டு உடனே கிளம்பினோம் எங்கும் பயணம் டைப்படவில்லை.

 வழியில் கண்ட ஒரு சிறு அருவி

கோவிந்த காட்டில் பத்ரிநாத் செல்லும் NH 58 பாதை   மேலே செல்ல கோவிந்த்காட் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் செல்லும் பாதை அலக்நந்தாவின் கரையோரமாக கீழே செல்லுகின்றது. 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிந்தகாட் என்னும் இவ்வூர் அலக்நந்தா மற்றும் புயாண்டர் நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது.  சுமார் இரண்டு கி.மீ தூரம் நடந்து கோவிந்த்காட்டின் சீக்கியரின் வழிபாட்டுத்தலமான குருத்வாராவை அடைந்தோம். ஹேம்குண்ட சாஹிப் மற்றும் பூக்களின் சமவெளி செல்லும் பக்தர்களுக்கு இங்கு தங்கும் வசதியும் வாகனங்களை நிறுத்தி விட்டு  செல்லும் வசதியும் உள்ளது.   வழியெங்கும் ஏகப்பட்ட வாகனங்கள் நின்றிருந்தன.  குருத்வாருக்கு அருகில் எண்ணற்ற கடைகள் உள்ளன. நாங்கள் அன்று இரவு குருத்வாராவில்  தங்கி  மறு நாள் அதிகாலை  ஹேம் குண்ட சாஹிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தோம்.

 ஜெய ( யானை) பர்வதம்


 சீக்கிய குருத்வாராக்களில் அனைவருக்கும் தங்க இட வசதியும், உண்ண உணவும் இலவசம்தான். வரும் வழியில் மலையில் ஹேம்குண்ட் சாஹிப் செல்லுவதற்கான பாதை கண்ணில் பட்டது சாரை சாரையாக எறும்பு ஊர்வது போல தரிசனம் செய்த மக்கள் கீழிறங்கி வந்து கொண்டிருந்தனர். சாதி சமய வேறுபாடு இல்லாமல் செல்பவர்கள் அனைவருக்கும் உணவும் உறையுளும் குருத்வாராவில் இலவசமாக  கிடைக்கின்றது. தலையை மட்டும் தலைப்பாகையால் மறைத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்பதால் நாங்கள் அங்கு கடைகளில் சீக்கிய தலைப்பாகை போன்ற தொப்பிகளை வாங்கிக்கொண்டோம். நம்முடைய பொருட்களை பாதுகாப்பாக  வைத்துக் கொள்ள சாமான்கள் பாதுகாப்பு அறையும் (Cloak room) உள்ளது. குருத்வாராவில் சுமார் 400க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன, அறைகளில் புகை வண்டிகளில் இருப்பது போல சுமார்  30 பேர் படுத்து தூங்கும்படி அடுக்கடுக்காக படுக்கை வசதிகள் அமைக்ககப்பட்டுள்ளன இவ்வாறு ஒரே சமயம் சுமார் 5000 பேர் அங்கு தங்கிக் கொள்ள முடியும் அனைவருக்கும் தலையனையும் கம்பளிகளும் இலவசமாக வழங்குகின்றனர். காலைக் கடன்களை முடித்துக் கொள்ளவும், குளிக்கவும்  வசதிகள் செய்துள்ளனர்.

விஜய (குதிரை) பர்வதம்

உணவு குருவின் லங்காரில் பரிமாறப்படுகின்றது. அன்னம் இலவசம்தான். 24 மணிநேரமும் தேநீர்  கிடைக்கும் காலை 5 மணிக்கு துவங்கும் காலை சிற்றுண்டி மதியம் 11 மணி வரையிலும் பின்னர் மதிய உணவு 12 மணி முதல்  மாலைமணி வரையிலும், மாலை சிற்றுண்டி பின்னர் இரவு உணவு என்று எப்பொழுதும்  அன்னம் என்று  பசியுடன் வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு வழங்கப்படுகின்றது. சப்பாத்தியை மட்டும் குருவின் பிரசாதமாக கையேந்தி வாங்கிக்கொள்ள வேண்டும். மற்ற உணவு வகைகளை தட்டில் பரிமாறுகின்றனர். உணவை வீண் செய்யாதீர்கள் வேண்டும் அளவு  மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். பசி தீர்க்கும் இந்த செயலை அவர்கள் தங்கள் முக்கிய கடமையாகக் கருதி செய்கின்றனர். எதற்கும் கட்டணம் கிடையாது, விருப்பம் உள்ளவர்கள் கொடுக்கும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்கின்றனர் அதுவும் ரூ200/-க்கு மேல் தருபவர்களுக்கு செர்ப்பா என்னும் இவர்களது தலைப்பாகை துணியும் பின்னி பிரசாதம் என்னும் பிரசாதமும் வழங்குகின்றனர்  கொடுக்கின்றனர். கோவிந்தகாட் குருத்வாரா, கங்காரியாவின் குருத்வாரா அல்லது ஹேம்குண்ட் சாஹிப் குருத்வாரா ஆகிய இந்த மூன்று குருத்வாராவில் எந்த ஒரு குருத்வாராவில் நன்கொடை செலுத்தினாலும் இந்த பிரசாதத்தை இங்கு பெற்றுக் கொள்ளலாம். தலைப்பாகை துணி வேண்டாமென்றால் முழுவதும் பின்னி பிரசாதமாகவே வழங்குகின்றனர்.

 கோவிந்த்காட் குருத்வாரா செல்லும் வழியில்

சீக்கியர்களில் கர சேவை என்னும் பழக்கம் உள்ளது அவரவர்களால் முடிந்த பணியை செய்கின்றனர். பெரிய செல்வந்தர்கள் கூட  தங்கள் காரில் வந்து இறங்கி குருத்வாராவின் பளிங்குப் படிகளை ஒரு துணியைக் கொண்டு துடைப்பதை நாம் காணலாம். சிலர் பிரசாதம் வழங்குவதிலும் சிலர் லங்காரில்  இலைப் போட்டு பரிமாறுவதிலும் பங்கு கொள்வார்கள். சிலர் பாத்திரங்களை கழுவுவதிலும் பங்கு கொள்கின்றனர்.  சிலர் பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்வார்கள். இவ்வாறு தங்களால் முடிந்த சேவைகளை  செய்கின்றனர்.  இது அனைத்து குருத்வாராக்களிலும் உள்ள பழக்கம். இந்தத் தடவைதான் கவனித்தோம் தில்லியில் இருந்து வரும் வழியெங்கும்,   எல்லா ஊர்களிலும் உள்ள குருத்வாராக்களில் இது போன்று உணவும் தங்கும் வசதியும் ஹேம்குண்ட் செல்லும் யாத்திரிகளுக்கு அளிக்கின்றனர் என்பதை இந்த்த் தடவை கவனித்தோம்

 கோவிந்த்காட்டிலிருந்து ஹேம்குண்ட்சாஹிப் மற்று
ம் பூக்களின் சமவெளிக்கு செல்லும் வழி காட்டி பலகையின்
 அருகில் திரு. தேஷ்பாண்டே அவர்கள்  

அறையில் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு கீழே வந்தோம். குருத்துவராவுக்குள் நுழைந்தாலே அங்கு இருக்கும் சுத்தம் நம்மைக் கவரும்.  வாழும் குருவாகிய குரு கிரந்த சாஹிப்  ஒரு மேடையில் வைக்கப்பட்டு மிக அழகான பட்டு அல்லது சாடின் துணியினால் போர்த்தப்பட்டிருக்கும். அந்தத் துணியின் வேலைப்பாடு மிக அழகாக நல்ல சரிகை வேலைப்பாடுடன் இருக்கும். கிரந்திகள் அருகில் அமர்ந்து கொண்டு குருவுக்கு சாமரம் வீசிக் கொண்டிருப்பார்கள்  சீக்கியர்கள் "குரு கிரந்த சாஹிப்" எனப்படும் அவர்களின் குருக்களின் பொன்மொழி அடங்கிய புனித புத்தகத்தையே  வாழும் குருவாக நினைத்து வழிபடுகின்றனர். உருவ வழிபாடு கிடையாது. அத்துடன் சில குருமார்கள் மிக அழகான  சபத்  என்ற குரு நானக்ஜியால் இயற்றப்பட்ட பஜன்களை (கீர்த்தனங்களை) மிக அழகான ராகத்துடனும் லயத்துடனும் பாடுவார்கள். ஹார்மோனியம் மற்றும் தபேலா  ஒலியுடன் நாலு பேர்கள் பாடுவது ஒருவர் பாடுவது போலவே இருக்கும். நாங்கள் சென்ற சமயம்  இரவு சபத் டைபெற்றுக்கொண்டிருந்தது. மனது ஒன்ற அமர்ந்து கீர்த்தனங்களை செவி மடுத்தோம்.

பின்னே  உயரமாக தெரியுக் கட்டிடம்தான்
கோவிந்த்காட் குருத்வாரா 

( 2013ல் பெய்த பெரும் மழையின் காரணமக அலக்நந்தாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு தாங்கள் காண்கின்ற  வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடம்  மற்றும் குருத்வாராவின் சில கட்டிடங்கள் சேதமடைந்தன, ஹேம் குண்ட்சாஹிப் செல்லும்  பாதையில் உள்ள பல கிராம க்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர், பூக்களின் சமவெளியிலும் , ஹேம் குண்ட் சாஹிப்பிலும் பெரும்  சேதம் ஏற்பட்டுள்ளது. பழைய நிலைக்கு திரும்ப இன்னும்  எத்தனை காலம்  ஆகும் என்பது தெரியவில்லை.) 

பின்னர் அர்தாஸ் எனப்படும் பிரார்த்தனை தொங்கியது. குருவிடம் வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் தரிசனமும், ஹேமகுண்ட சாஹிப் தரிசனமும் சித்திக்கவேண்டும் கல்ஸா(khalsa) எனப்படும் சீக்கிய சமுதாயத்தில் உள்ள அனைவரும் எந்த வித இடரும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும், சமுதாயம் செழிக்க வேண்டும், இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிட்ட வேண்டும், கன்னி பெண்களுக்கு நல்ல கணவர்கள் அமைய வேண்டும் இவையெல்லாம் குருவருளால் சித்திக்கவேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். மேலும் ஹேம்குண்ட தலத்தை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள் அங்கு செய்யத்தகாத செயல்களை செய்யாதீர்கள் என்ற அறிவுரையும் தருகின்றனர்.  பின்னர் குரு கிரந்த சாஹிப்பை திறந்து அப்பக்கத்தில் உள்ள ஹுகும்நாமா எனப்படும் குருவின் ஆணையாகிய கிரந்தத்தை படிக்கின்றனர். பின்னர் பட்டுத்துணியில்  குரு கிரந்த் சாஹிப்பை மூடி சாமரம் வீசிக் கொண்டு தலையில் குருவை சுமந்து சென்று  பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்கின்றனர். காலையில் முதலில் சன்னதியை சுத்தம் செய்து பால்  அபிஷேகம் செய்து பின்னர் குருவை மேடைக்கு  எழுந்தருள செய்து பூஜைகள் தொடங்குகின்றன. மேலே சொன்ன அர்தாஸ் எனப்படும் பிரார்த்தனை நாள் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கிரமமாக நடைபெறுகின்றது. பக்தர்கள் குருவை சுற்றி வந்து வணங்கி மிகவும் சுவையான குளிருக்கு ஏற்றார் போல சுத்த நெய் மற்றும் சக்கரையினால் தயாரிக்கப்படும் ஸுஜி அல்வா   பிரசாதம் ஸ்வீகரித்துக்கொண்டு சற்று நேரம் அமர்ந்து குருவிடம் தங்கள் கோரிக்கைகளை பிரார்த்தித்துக் கொண்டு செல்கின்றனர்.  அர்தாஸ் நடக்கும்   போது சொல்லப்படும் பிரார்த்தனைகளை சீக்கியர்கள் அனைவரும் அறிந்திருக்கின்றனர் அனைவரும் அதை குருவிடம் கோருகின்றனர். சிறு வயதில் இருந்தே கௌர்(Kaur) என்று அழைக்கப்படும் சீக்கியத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தலைப்பாகை கட்ட பழக்கித்தரும் போதே இந்த இந்த பிரார்த்தனைகளையும் போதிக்கின்றனர் என்பது கண்கூடு. "வாஹே குரு ஜி கா கால்சா, வாஹே குரு ஜீ கா பதே "(கால்சா இறைவனுக்குரியது (இங்கே குரு), வெற்றி இறைவனுக்குரியது என்பது இவர்களின் அறைகூவல் ஒவ்வொரு அர்தாஸின் முடிவில் ஜெய்காரம் என்னும்  போலே ஸோ நிஹால்”   என்று முக்கிய கிரந்தி கூற  சத்ஸ்ரீ அகால் என்று அதற்கு மறு மொழியாக   மற்றவர்கள் கூறுகின்றனர்  இதன் பொருள் முதல் பகுதி  யார் இதை சொல்லுகின்றார்களோ அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் (அவர்களின் எண்ணம் நிறைவேறும்) ……..  இரண்டாவது பகுதி  என்றும் நிலையாக உள்ள  இறைவனுக்கு  எப்போதுமே வெற்றி என்பதாகும்.

 அலக்நந்தா நதிக்கரையிலுள்ள 
 கோவிந்த்காட் குருத்வாரா முன்னர் தினேஷ் 



குருவை தரிசித்து விட்டு பின் அறைக்கு வந்தோம் எங்கள் அறைக்கு ஹேம்குண்ட் சாஹிப்பை தரிசனம் செய்து விட்டு வந்த ஆறு பேர் கொண்ட  ஒரு வயதான சீக்கிய குழுவினர் தங்குவதற்காக வந்தனர், அவர்கள் தங்களது கைத்தடியையும், 20 ரூபாய் மழைக்கோட்டையும் எங்களுக்கு கொடுத்துதவினர், அவர்கள் சென்ற சமயம் மழை இல்லையாம்  நல்ல குளிர் இருந்தது அருமையான தரிசனம் கிடைத்த்து என்று கூறினார்கள்.சலசலத்து ஓடும் அலக்நந்தாவின் சத்தம் தாலாட்டுப்போல இருக்க அப்படியே உறங்கினோம்.

No comments: