Sunday, November 3, 2013

கந்தன் கருணை பொழியும் திருச்செந்தூர்


 செந்திலாண்டவன் மேலை  இராஜ கோபுரம்

அண்மையில் ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவையை சேவிக்க சென்ற போது திருச்செந்தூரில் செந்திலாண்டவனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது.  இந்த கந்தர் சஷ்டி சமயத்தில்  அவரின் தங்கத் தேர் பவனியை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப் பதிவு. 

மூலவர் கிழக்கு நோக்கி  நின்ற கோலத்தில் தலையில் ஜடா மகுடமும் வல  மேல் கரத்தில்  வஜ்ராயுதமும் கீழ் கரத்தில் அர்ச்சனை செய்யும் தாமரையும்  இட மேல் கரத்தில்   ருத்திராக்ஷ  மாலையும் இடகீழ்க்கரம் கடி ஹஸ்தமாகவும் விளங்க பால சுப்பிரமணியராக சிவ பூஜை செய்யும் கோலத்தில்  அருள் வழங்குகின்றார்.   

மேலே தாங்கள் காண்கின்ற இராஜ கோபுரம் மேற்கில் உள்ளது. மூலவர் கிழக்கே கடலை நோக்கி உள்ளார். எனவே இதன் கதவு எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். கந்தர் சஷ்டி ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, ஏழாம் நாள் தெய்வயாணை திருமணத்தின் போது நள்ளிரவில் மட்டுமே இக்கதவு திறக்கப்படுகின்றது. அப்போதும் பக்தர்கள் யாரும் இவ்வழியாக செல்ல அனுமதிப்பதில்லை. 


கந்தனின் ஆறு படை வீடுகளில் இது இரண்டாவது படை வீடு. சூரபத்மனுடன் போரிட  தேவர் படையுடன் பால முருகன் வந்து அமர்ந்த தலம். சூரனை சம்ஹாரம் செய்து ஆணவமாம் அவனை ஞான வேலால் பிளந்து மயிலாகவும் சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் கொண்டு சூரனுக்கு பெருவாழ்வளித்து ஜயந்தி நாதராக நின்ற தலம்.  எனவே  இங்கு கந்தர் சஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்றைய தினம் கடல் உள்வாங்கும் அதிசயம் நடைபெறும் தலம். சுனாமியின் போதும் மற்ற இடங்களில் கடல் பொங்கி வர இங்கு மட்டும் கடல் உள் வாங்கியது எனவே இவர் சுனாமியை வென்ற சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகின்றார். வியாழ குருவும் தேவர்களும் பூஜித்த தலம்.

சூரனைக் கொன்ற பாவம் தீர சிவ பூஜை செய்த தலம். முருகர் பூஜித்த லிங்கம் செந்திலாண்டவனுக்கு பின் புறம் உள்ளது.  கடற்கரையில் அமைந்ததால் நற்சீரலைவாய் என்னும் பெயர் பெற்ற தலம். வீரபாகு தூது சென்றதால் வீரபாகு பட்டிணம் என்றும் அழைக்கப்படுகின்றது.  

இத்தலத்தில் முருகர் ஞானகுருவாக அருள் பாலிக்கின்றார். அசுரர்களை அழ்ப்பதற்கு முன்பு  குருபகவான் முருகனுக்கு அசுரர்களின் வரலாற்றை இத்தலத்தில் கூறினார் எனவே இது குருத்தலம் ஆகும். 

 சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து அவன் அம்சமாகவே பிறந்து அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் முருகப்பெருமான். பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்தவர். மஹா விஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். இவ்வாறு மும்மூர்த்திகளின் சம்பந்தம் கொண்டு திகழ்பவர்.  எனவே ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக அருட்காட்சி தந்தருளுகிறார். விழாவின் ஏழாம் நாள் மாலை ஆறுமுக நயினார்  பல்லக்கில் சிவப்பு சார்த்தி சிவ அம்சமாக அருட்காட்சி தருகின்றார் முன்பக்கம் முருகராகவும், பின் பக்கம் நடராசராகவும் அலங்காரம் செய்கின்றனர். மறு நாள் காலை வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சார்த்தி பிரம்மன் அம்சமாக  அருளுகின்றார்.  அன்று மதியம் அவரே பச்சை சார்த்தி விஷ்ணு அம்சமாக அருளுகின்றார்.  

 இத்திருக்கோவிலில் நான்கு உற்சவர்கள்.  தாங்கள் இப்பதிவில் காணும் அறுபடை வீட்டை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அறுகோண தங்கத் தேரில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் ஜெயந்தி நாதர் ஆவார். இவர் மூலவரைப் போலவே வல மேற்கரத்தில் வஜ்ராயுததுடன் அருள் பாலிக்கிறார்.   குமார விடங்கர் மாப்பிள்ளை சுவாமி சூர சம்ஹாரத்திற்குப் பின் தெய்வயாணையை மணம் புரிந்து அருள்பவர் இவர்.   ஆறுமுக நயினார் என்று பக்தர்களால் அன்புதன் அழைக்கப்படும் சண்முகர் மற்றும் அலைவாய்ப்பெருமாள் ஆகியோரும் அருளுகின்றனர். நால்வரும் தெற்கு நோக்கி தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.  

இந்த சண்முகரை ஒரு சமயம் டச்சுக்காரர்கள் கொள்ளையடித்துக்கொண்டு  கடலில் சென்ற போது புயல் மழை ஏற்பட்டது எனவே பயந்த டச்சுக் கொள்ளையர்கள் சண்முகரை கடலில் போட்டுவிட்டு இலங்கை ஓடி விட்டனர். பின்னர் ஒரு சம்யம் வடமலையப்ப பிள்ளை என்பவர் கனவில் முருகன் வந்து நாளை கடலுக்குள் செல் நான் இருக்கும் இடத்தில் எலுமிச்சம் பழம் மிதக்கும் கருடன் பறக்கும் என்று அருளினார். வடமலையப்பப் பிள்ளை மறு நாள் படகில்  கடலில் செல்ல முருகன் குறிப்பிட்டவாறே கருடன் பறக்க எலுமிச்சம்பழம் மிதந்த இடத்தில் மூழ்க சண்முகருடன் ஒரு நடராஜர் சிலையும் கிடைத்தது. ஆகவே இன்றும் சண்முகர் முகத்தில் உப்பு நீரால் ஏற்பட்ட அரிப்பைக் காணலாம்.     



திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு  ஆகும். சூரபத்மனுக்கு பெரு வாழ்வு அளித்த பின் தன் படை வீரர்களின் தாகம் தணிக்க முருகன் தனது சக்தி வேலால் உருவாக்கியது இந்து நாழிக்கிணறு  ஆகும்.      கடலுக்கு  மிக அருகில் இருந்தும் இன்றும் இக்கிணற்றில் நல்ல தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது.  



ஒரு காட்டில் வழி தெரியாமல் நின்ற அருணகிரி நாதரை மயில் உருவில் வழிகாட்டி முருகர் திருச்செந்தூர் அழைத்து வந்தார். அருணகிரி நாதர் முருகனை சிவ வடிவாகவே கண்டார். எனவே முருகர் அருணகிரி நாதருக்கு நடனக் காட்சி காட்டியருளினார். எனவே அருணகிரி நாதர் கயிலை மலையணைய செந்தில் வாழ்வே என்று பாடினார்.   
         
இயலிசையிலுத வஞ்சிக்                                     கயர்வாகி
             இரவுபகல் மனது சந்தித்து                      உழலாதே
உயர் கருணை  புரியும்  இன்பக்                        கடல்மூழ்கி
            உனை எனதுள் அறியும் அன்பைத்      தருவாயே 
மயில் தகர்கலிடைய  ரிந்தத்                             தினைகாவல்
             வசனகுற மகளை வந்தித்(து)               அணைவோனே
கயிலைமலை அனைய செந்திற்                     பதிவாழ்வே
             கரிமுகவன் இளைய கந்தப்                   பெருமாளே!   
             


ஒரு சமயம் அபிநவ குப்தன் என்பவன் சண்மத ஸ்தாபகர் ஆதி சங்கரரின் மேல் அசூயை கொண்டு  அபிசார பிரயோகம் செய்தான் அதனால் ஆதி சங்கரருக்கு தீராத வயிற்றுவலி உண்டானது. ஆச்சார்யர் திருக்கோகர்ணத்தில் இருக்கும் போது " திருச்செந்தில் சென்று முருகனை வழிபட்டால் நோய் தீரும் என்று அசரீரி கூறியது. சங்கரர் கோவிலின் உள்ளே நுழையும் போது பாம்பைக் கண்டார். செந்திலாண்டவனை  வணங்கிய பின் இவரது வயிற்றுவலி நீங்கியது.  எனவே பாம்பு வளைந்து நெளிந்து செல்வதைப் போன்ற சுப்பிரமணிய புஜங்கம் இயற்றினார் ஆதி சங்கரர்.  இந்த கந்தர் சஷ்டி சமயத்தில் சுப்பிரமணிய புஜங்கம் படிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம் மநோஹாரி
தேஹம் மஹச்சித்தகேஹம்   |
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்மஹாதேவ
பாலம் பஜேலோகபாலம்  ||

மயில் வாகனத்தில் ஏறியவறும், மஹா வாக்கியத்தின் உட்பொருளானவரும், அழகு வாய்ந்த தேகமுள்ளவரும் மகான்களின் மனத்தை வீடாகக் கொண்டவரும், பூதேவர்களான வேத வித்துக்களால் உபாஸிக்கப்படுபவரும், உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும் உலகங்களைக் காப்பவருமான தங்களை பூஜிக்கிறேன் என்று மகான்களின் மனத்தில் குடியிருக்கும் வேதப்பொருள் சுப்பிரமணியரை போற்றுகிறார்.

இந்த புஜங்கத்தில் ஒரு பாடலில் ஆச்சார்யர் சண்முகர் சந்நிதியில்  பன்னீர் இலை வைத்து தரப்படும்  விபூதியின்  மகிமையைப் பற்றி பாடியுள்ளார்.

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ஸ:
ப்ரமேஹ-ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:  |
பிஸாசஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம் விலோக்ய
க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே  ||

 பன்னீர் இலை விபூதியை கண்ட மாத்திரத்தில் கைகால் வலிப்பு, காசம், சயம், குஷ்டம், முதலிய நோய்கள் நீங்கும் பூதம் பிசாசம் செய்வினை விலகும்  என்று பாடுகின்றார் ஆதி சங்கரர்.  பன்னீர் இலையில் பன்னிரு நரம்புகள் உள்ளன இவை முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிக்கின்றன. எனவே  முருகனே தன் திருக்கரங்களால் விபூதி வழங்குவதாக ஐதீகம். பன்னீர் இலையின் வடிவமும் வேல் போல இருக்கும். முருகனை வழிபட்ட தேவர்களே பன்னீர் மரங்களாக மாறினர் என்பது ஐதீகம். பன்னீர் இலையில் திருநீறு வைத்திருந்தால் பெரும் ஐஸ்வர்யம் இருப்பதற்கு சமம். 


குமரகுருபரர் ஐந்து   வயது வரையில் வாய்   பேசாமல் இருந்தார்.      அவரது பெற்றோர் அவரை    திருச்செந்தூர்    அழைத்து வந்த   போது கந்தன்   தனது கருணையினால் வேலினால் அவர் நாவில் எழுதி அவனை பேச வைத்தார். அவர் கந்தர் கலி வெண்பாவில் குட்டி கந்த புராணம்  இயற்றினார், மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழும் அவர் இயற்றினார். 


சிவபெருமானோடு எற்பட்ட வாக்குவாதத்தினால்,பெரு நோயான குஷ்டத்தால் அவதிப்பட்ட நக்கீரர் தினமும் சிவனைத் தவறாமல் வழிபட்டு வருகின்றார்.அவ்வயம்,கைலாசம் சென்று சிவனைத் தரிசித்தேத் தீருவது என்ற தீர்மானத்தில் செல்லும்போது திருப்பரங்குன்றத்தில் குளமொன்றினருகில் அமர்ந்து வழிபடத் தொடங்கினார் அப்போது அங்கிருந்த கல்முகி என்ற பூதம் அவரைச் சோதிக்க அரசமரமொன்றிலிருந்து ஒரு அரச இலையை விழச் செய்தது.அவ்விலையானது கீழே இருந்த தண்ணீரில் விழுந்து,அதன் ஒரு பாதி மீனாகவும் மறு பாதி பறவையாகவும் மாறியது .இக்காட்சியைக் கண்ட நக்கீரர் மெய்மறந்து நின்றார்.சிவ பூஜை செய்ய மறந்த நக்கீரனை கல்முகி பூதம் உடனே கைது செய்து திருச்செந்தூரில் உள்ள குகையொன்றில் சிறை வைத்தது.தன்னை விடுவிக்க அத்தனை தெய்வங்களையும் போற்றித் துதித்தும் பயனில்லாததால் ,தம்மை  உற்ற தெய்வம் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கந்தப் பெருமானே என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை என்ற நூலை பாடினார். நிறைவாக,


"உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின் செல்லேன்;பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா!  செந்தில் வாழ்வே! "

என்று மனமுருகப் பாடியதும் சக்தி வேலாயுதத்துடன் தோன்றிய முருகன் நக்கீரரை மீட்டார்.அவருடன் சிறை வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.முருகனின் திருவிளையாடலால் தமிழின் பெருமையை ஆறுபடை வீடுகளின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்பும் அற்புதமான சங்க இலக்கியம் நமக்குக் கிடைத்தது.


பகழிக்கூத்தர் என்ற அன்பர் வைணவர் இவருக்கு ஒரு சமயம் தீராத வயிற்றுவலி வந்தது. இவர் கனவில் முருகப்பெருமான் வந்து பிள்ளைத் தமிழ் பாடு உன் வயிற்று வலி நீங்கும் என்று கூற அவரும் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடி தனது வயிற்று வழி நீங்கப்பெற்றார். 



தண்டையணி  வெண்டையங்  கிண்கிணிச  தங்கையுந்
தண்கழல்சி  லம்புடன்    கொஞ்சவேநின்-
தந்தையினை  முன்பரிந்  தின்பவரி  கொண்டுநன்
சந்தொடம  ணைந்து நின்     றன்புபோலக்;   

கண்டுறக டம்புடன் சந்த மகுடங்களுங்                   
கஞ்ச மலர்   செங்கையுஞ்  சிந்துவேலும்- 
கண்களுமு   கங்களுஞ் சந்திரநி  றங்களுங்
கண்குளிர  என்றன்முன்  சந்தியாவோ;

புண்டரிக  ரண்டமுங் கொண்டபகி  ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது-
பொன்கிரியெ னஞ்சிறந்தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர்  தந்தையுஞ்  சிந்தைக்கூரக் ;

கொண்டநட னம்பதஞ்  செந்திலு மென்றன்முன்
கொஞ்சி நட  னஞ்கொளுங்  கந்த வேளே
கொங்கைகுற  மங்கையின்  சந்தமண  முண்டிடுங்
கும்பமுனி  கும்பிடுந்   தம்பிரானே
   


தங்கத்தேரில் ஜெயந்திநாதர்

கடைசி நிமிடத்தில்தான் என் நண்பர் இவ்வாறு திருச்செந்தூரும் செல்கிறேன் என்று கூறினார். அங்கு அருமையாக  தங்கத்தேர் தரிசனம் முதலில் கிட்டியது, நாங்கள் சென்ற சமயம்  மே மாதம் பள்ளி விடுமுறை என்பதால் சரியான கூட்டம். எனவே ஒரு  போலீஸ்காரரை அனுகினோம் சென்னையில் இருந்து வந்திருக்கின்றோம் இந்த நிறுவனத்தில் பணி புரிகின்றோம்  தரிசனத்திற்கு உதவி செய்ய முடியுமா? என்று கேட்டோம். கந்தனின் கருணையினால் அபிஷேக சமயத்தில் அழைத்து சென்று அருமையாக தரிசனம் செய்து வைத்தார் .  அது போலவே மறு நாள் காலை நாழிக்கிணற்றில் நீராடும் பாக்கியமும், சண்முகரிடம் பன்னீர் இலை விபூதியும் கிடைத்தது கந்தன் அருளால். . 

முருகன் அருள் முன்னிற்கும்



சென்னை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணீய சுவாமி
கந்தர் சஷ்டி சிறப்பு அலங்காரத்தில்


வண்ண மயில் ஏறும் வடிவேல் அழகா
வள்ளி தெய்வாணையுடன் காட்சிதரும் ஆறுமுகா
பன்னிரு விழிகளிலே  பரிவுடன் ஒரி விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும் சண்முகா.

No comments: