Friday, December 27, 2013

இன்னருள் புரியும் அரசே பள்ளியெழுந்தருள்

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!.........(4)



பொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே!

உனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.

இவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே! ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.

எம்பெருமானைத் தரிசிக்கத் திருப்பெருந்துறைக்கு வந்திருக்கும் தொண்டர் கூட்டத்தையும் அவர்களுடைய பரவசத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறார் மாணிக்கவாசகர்:

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

No comments: