Thursday, August 18, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -1


அனந்த பத்மநாப சுவாமி - திருவனந்தபுரம்

பரமபதத்திலே   வியூக நிலையிலே  அமர்ந்த கோலத்தில் திருமகள், நிலமகள், நீளாதேவிகளுடன்,  நித்திய சூரிகளும் புடைசூழ  எழுந்தருளிச் சேவை சாதிக்கின்ற  அந்த மாயன்,  பாற்கடலில் பரவாசுதேவனாக  மாயத்துயில் கொண்டுள்ளார், அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி  அவதாரங்கள் எடுத்து  விபவ ரூபமாக  அருள் வழங்குகின்றார். அந்தப் பரம்பொருளே  அந்தர்யாமியாக எல்லா ஜீவராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு, ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அவரே   அர்ச்சாவதாரமாகப்  பூவுலகில்  பல்வேறு தலங்களில் எழுந்தருளிச் சேவைச் சாதிக்கின்றார்.  இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவர் அவர் ஒருவரே.

திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் குளித்துக் களித்து கவி பாடியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள்  எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்றுத் திவ்யப் பிரபந்தத்தை”  நாம் எல்லோரும் உய்ய அருளியவர்கள் எனவே “திவ்ய சூரிகள்”, எம்பெருமானின் அம்சமாக பூமியில் அவதரித்தவர்கள். இவர்கள் மங்களாசாசனம் செய்தத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள்”  ஆகும்.  இவை மூன்றும் திவ்ய த்ரயம் என்றழைக்கப்படுகின்றன. திவ்ம் என்ற பதத்திற்கு தெய்வ சம்பந்தம் உடையது என்று பொருள்.

இந்தத் திவ்யப் பிரபந்தங்களுக்கு  மூன்று சிறப்புகள் உள்ளன. அவையாவன பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகும்.  பிரமாணம் உண்மை அறிவிற்கு கருவியாயிருப்பது (திவ்வியப் பிரபந்தங்கள்). பிரமேயம் பிரமாணத்தால் அறியப்படும் பொருள் (திவ்விய தேசங்கள்). பிரமாதா உண்மை அறிவுடையோர்,  திவ்விய சூரிகளாகிய ஆழ்வார்கள். இவ்வாறு அனைத்துமே தெய்வ சம்பந்தமான  சிறப்பு பெற்றவை. எனவேதான் மணவாள மாமுனிகளும் 

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தான் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்த்து -   என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஸ்ரீவல்லபன் - திருவல்லவாழ்

எனவே வேதமே திவ்வியப் பிரபந்தகளாகின. நம்மாழ்வாரின் நான்கு அருளிச் செயல்கள் நான்கு வேதங்கள் ஆகின. திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச் செயல்கள் அதற்கான அங்கங்களாகின. ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வார்  இயற்றியவை தவிர மற்ற நூல்கள் உபாகமங்கள் ஆயின. வேதமே எம்பெருமானின் நிலைக்கு ஏற்ப மாறி வரும் முறையில் தமிழாகித் திவ்வியப் பிரபந்தங்களாக அவதரித்தன என்பது சம்பிரதாயம். ஆகையால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்வியப் பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும்..

ஓம் நம:  முதலாயிரம்.
நாராயணாய : திருமொழி
கீதா சரமச் சுலோகம் : இயற்பாக்கள்
த்வயம் : திருவாய் மொழி

திருப்பல்லாண்டு “ஓம்” என்ற பிரணவத்தின் விரிவு, “கண்ணி நுண் சிறு தாம்பு   - நம:”பெரிய திருமொழி  நாராயண” என்கிற பரம் பொருளின் விளக்கம். இவ்வாறு முதலாயிரமும்  இரண்டாமாயிரமுமே திருமந்திரம்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் 
முதல்பத்து : ஸ்ரீமந்
இரண்டாம்பத்து : நாராயண
மூன்றாம்பத்து : சரணௌ
நான்காம்பத்து : சரணம்
ஐந்தாம்பத்து : ப்ரபத்யே
ஆறாம்பத்து : ஸ்ரீமதே
ஏழாம்பத்து : நாராயண
எட்டாம்பத்து : நாராயண
ஒன்பதாம்பத்து : ஆய
பத்தாம்பத்து : நம:
அதாவது திருமகளோடு கூடிய நாராயணனின் திருவடிகளை புகலிடமாகப் பற்றுகின்றேன். திருமகளோடு கூடிய நாராயணனுக்கு எல்லா அடிமைகளையும் செய்யப் பெறுவேன் என்னும் நான்காமாயிரமாகிய திருவாய்மொழியே த்வயம். 

சர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: ||

அதாவது “என்னை அடைவதற்கு அனைத்து நெறிகளையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று. நான் உன்னை என்னை அடையவிடாமல் தடுக்கும் சர்வ பாபங்களிலிருந்தும் விடுவித்து என்னை அடைய வைப்பேன்  என்னும் கீதா சரம (இறுதியான) சுலோகம் சரணாகதி என்னும் பிரபத்தியாகும். அதாவது இறைவனையே உபாயமாகக் கொள்வதாகும். மூன்றாமாயிரமாகிய இயற்பாக்களே  கீதா சரம சுலோகம்.

இவ்வாறு ஸ்ரீவைணவத்தின் திருமந்திரம், த்வயம், கீதா சரமசுலோகம், ஆகிய  அனைத்து மந்திரங்களையும் உள்ளடக்கியத் திவ்விய பிரபந்தமாம் அருளிச் செயல்  பெற்ற திவ்விய தேசங்களை உகந்தருளிய நிலங்கள்” என்று கூறுவது வைணவ மரபாகும்.

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம்சீர்நடுநாடு
ஆறோடு ஈரெட்டாம் தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாக் கொள்.

என்ற பழம்பாடலின்படி கங்கையின் புனிதமான காவிரி பாய்ந்து வளம் பெருக்கும் சோழ நாட்டில் பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் முதலாக  40 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன, தண்பொருநை என்னும் தாமிரபரணி பாயும் பாண்டிநாட்டில் 18 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. வேழமுடைத்து மலைநாடு என்ற சிறப்புப் பெற்ற அன்றைய சேரநாடு,   இன்றைய கேரளத்தில்  13 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன, நடுநாட்டில் 2 திவ்ய தேசங்களும்,  திருக்கச்சி அடங்கிய தொண்டைநாட்டில்  22 திவ்ய தேசங்களும், தமிழகம் அல்லாத  வடநாட்டில் 12 திவ்ய தேசங்களும், திருவைகுந்தமாம் திருநாடு ஒன்றாகும் என்பது இப்பாடலின் விளக்கம் ஆகும்.



ஆதி கேசவர் - திருவாட்டாறு 
ஆக மொத்தம் திவ்ய தேசங்கள் மொத்தம் 108 ஆகும். தற்போது 84 திவ்ய தேசங்கள் நமது தமிழ்நாட்டிலும், 11 திவ்ய தேசங்கள் கேரளத்திலும், 2 திவ்ய தேசங்கள் ஆந்திர பிரதேசத்திலும், 7 திவ்ய தேசங்கள் உத்திரபிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் மாநிலங்களிலும், ஓர் திவ்ய தேசம் குஜராத்திலும் ஆக 105 திவ்ய தேசங்கள் நமது பாரதத்திருநாட்டிலும், ஓர் திவ்ய தேசம் நேபாள  நாட்டிலும் அமைந்துள்ளன. 

மண்ணுலகிலுள்ள இந்த  106 திவ்ய தேசங்களை மட்டுமே நாம் பூத உடலுடன் சென்றுச் சேவிக்க முடியும். விண்ணுலகில் உள்ள திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும்  அவன் அருளின்றி கிட்டாது என்பர் ஆன்றோர்கள். திருப்பாற்கடல் ஷீராப்திநாதன் கடல்மகள் நாச்சியார் வீற்றிருக்கும் தலம்.  திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் - பரமபதநாதன் - பெரிய பிராட்டியார் உறைந்திருக்கும் இடம். இவை இரண்டும் கடைசி நிலையாகிய வீடு பேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலையை எய்திச் செல்லும் இடமாகும்.


மலை நாட்டு அம்பலம் 

இம்மையில்  இந்த 106  திவ்ய தேசங்களையும் சேவித்தால் மற்ற இரண்டையும் சேவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆகவே திருவைணவர்கள் இந்த 106 திவ்யதேசங்களையும் தேடித் தேடிச் சென்று நாடி நாடி நரசிங்கா! நரசிங்கா! என்றுச் சேவிக்கின்றனர். அடியேனும் இவ்வாறு மலைநாட்டு திவ்ய தேசங்களைச் சேவிக்க சென்ற அனுபவங்களை இந்நூலில்  காணலாம் அன்பர்களே.


மலை நாட்டு திவ்ய தேச பெருமாள்களை  திவ்யமாக சேவிப்பதற்கு முன்னால் வம்மின்  அன்பர்களே கேரளக் கோவில்களின் தனித்தன்மைகளைப் பற்றிக் காணலாம். நமது தமிழ்நாட்டு ஆலயங்களைப் போல கேரள ஆலயங்கள் பிரம்மாண்டம் மற்றும் கலை அம்சம் நிறைந்தவையாக இல்லாவிட்டாலும் இக்கோவில்களில் எளிமையும், ஒழுங்கும், தூய்மையும், நேரம் தவறாமையும்,  சிரத்தையும்  நம்மை அதிசயிக்க வைக்கின்றன.

இங்கு திருக்கோவில்கள் அம்பலம் என்றழைக்கப்படுகின்றன. இவை நம்முடைய கோவில்களைப் போல பிரம்மாண்டமானவை அல்ல, நெடிதுயர்ந்த இராஜ கோபுரங்கள் இல்லை. எளிமையாக இயற்கையுடன் இயைந்தவாறு அமைந்துள்ளன. மலைப்பகுதி என்பதால்  கட்டிடங்கள் பொதுவாக  மரத்தால் ஆனவை. கூரைகள் எல்லாம் பொதுவாக  ஓடு வேய்ந்தவையாகவே உள்ளன. அதிகமாக மழை பெய்யும் பிரதேசம் என்பதால் மழை நீர் வழிந்து ஓடும் படியாக எல்லா அமைப்புகளுமே சாய்ந்த கூரை கொண்டவையாக அமைந்துள்ளதைக் காணலாம். அதுவும் அனைத்தும் தாழ் கூரையாகவே அமைந்துள்ளன. சன்னதிக்குள் நுழையும் போதே குனிந்து பணிவாகத்தான்  நாம்  செல்ல வேண்டும்.  மரச்சிற்பங்கள் மற்றும் மூலிகை வர்ண  ஓவியங்கள், விளக்குகள், யானைகள், தூய்மை மற்றும் காலம் தவறாமை,  ஆகியவை  இக்கோவில்களின் தனி சிறப்பு ஆகும்

தேகோ தேவாலயஹ ப்ரோக்தோ ஜீவோ தேவ: சதாசிவ:” அதாவது மனித உடலே ஆலயம் அதில் உள்ள ஆத்மாவே சதாசிவன்  என்று குலார்ணவ தந்த்ரம் என்ற நூலில் கூறியுள்ளபடி கேரளக் கோவில்களின் அமைப்பு மனித உடலைப் போல அமைக்கப்படுகின்றது. தேவ தேவியரின் கர்ப்பகிரகம் இங்கு ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகின்றது அது சிரசு என்பது ஐதீகம். அதில் தெய்வ மூர்த்தம் சகஸ்ரார பத்மமாக  விளங்குகின்றது.

ஸ்ரீகோவில்  சதுர வடிவம், அல்லது செவ்வக வடிவம் கொண்டதாக இருந்தால் விமானம் பிரமிட் போல அமைந்துள்ளது, வட்ட வடிவில் ஸ்ரீகோவில் உள்ள ஆலயங்களில், கூம்பு அதாவது தொப்பி போல விமானம் அமைந்துள்ளன. ஒன்பது மலை நாட்டு திவ்விய தேசங்களில் இது போன்ற விமானங்களை  சேவிக்கலாம்.  விமானத்தில் பொதுவாக  ஓடுதான் வேய்ந்துள்ளனர், சில ஆலயங்களில் தாமிரம், மற்றும் பொன் தகடும் வேய்ந்துள்ளனர்  சில ஆலயங்களில் இரண்டடுக்கு மூன்றடுக்கு விமானங்களும் உள்ளன, சில  ஆலயங்களில்  நீள் வட்ட ஸ்ரீகோவிலுடன் கஜபிருஷ்ட  விமானத்தையும் காணலாம். விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் தாழிக்கக்குடம் என்றழைப்படுகின்றது.

பல திவ்ய தேசங்களின் கர்ப்பகிரக சுவர்களில் கேரள பாணி ஓவியங்கள் அருமையாக வரையப்பட்டுள்ளன, இன்றும் இயற்கை மூலிகைவர்ணங்களையே இந்த ஓவியங்களை வரையப் பயன்படுத்துகின்றனர் என்பது சிறப்பு. சில ஆலயங்களில் கூரையிலிருந்து எழிலாக விளக்குகள் தொங்குகின்றன.  கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள படிகள் சோபனம் என்றழைக்கப்படுகின்றன. அவற்றில் பூசை செய்யும் போத்திகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகின்றனர். சில ஆலயங்களில் சோபனத்தின்  இருபுறமும் துவார பாலகர்கள் அமைத்துள்ளனர்.

கர்ப்பகிரகத்தை (ஸ்ரீகோவில்) ஒட்டிய  உள் பிரகார சுற்று மண்டபம் கர்ப்பகிரகம் எவ்விதம் இருந்தாலும் செவ்வகமாகவே அமைந்துள்ளது. இந்த பிரகாரம் அந்தராளம், பிரதக்ஷிண வட்டம் அல்லது பலி வட்டம் என்றழைக்கப்படுகின்றது. இந்த பிரகாரம் திருமுகமாக கருதப்படுகின்றது இச்சுற்றில்  ஸ்ரீகோவிலை ஒட்டி கிழக்குத் திசையில் இந்திரன், அக்னி, பிரம்மா, தென் திசையில் யமன், சாஸ்தா,   ப்ராஹ்மி, மாஹேஸ்வரிகௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்கள், மேற்குத்திக்கில்  நிருதி, வருணன், வாயு வடக்கு திசையில்  குபேரன், ஈசானன்  ஆகிய அஷ்டதிக் பாலகர்கள்மற்றும் வீரபத்திரர், கணபதி, சாஸ்தா, அனந்தன், துர்கா, சுப்பிரமணியர், நிர்மால்யதாரி, ஆகியோரை குறிக்கும் பலிக்கற்கள் அமைந்துள்ளன, பொதுவாக இவை பித்தளை கவசம் பூண்டவைகளாக உள்ளன. சில ஆலயங்களில்  சப்த மாதர்களுக்கு மேல் கூரை உள்ளது இது ”மாத்ருசாலா” என்றழைக்கப்படுகின்றது. இங்கு உற்சவ பலி பூஜைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீகோவிலின் படிகளுக்கு எதிரே உள்ள நான்கு கால் மண்டபம் நமஸ்கார மண்டபம் என்றழைக்கப்படுகின்றது. ஆராதனைக்குப் பின்னர் போத்திகள் இதில் ஏறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றனர். மேலும் வேத ஜபம் மற்றும் கலசபூஜை ஆகியவை இம்மண்டபத்தில் நடைபெறுகின்றது எனவே இம்மண்டபம் கலசமண்டபம் என்றும் அழைக்கப்படுகின்றது. நமஸ்கார மண்டபத்தின் கூரையும் பிரமிட் வடிவத்தில் உள்ளது,  உச்சியில் கலசம் அமைத்துள்ளனர். நான்கு மரத்தூண்களிலும் கூரையின் உட்புறத்தில் அருமையான மர சிற்பங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான கோவில்களில் இம்மண்டபத்தின் உட்கூரையில் நவகிரகங்களின் சிற்பங்கள் வட்டவடிவில் காணக்கிடைத்தது. சட்டங்களில் நாகக்குடையுடன் தசாவதார கோலங்களையும் காணலாம். இம்மண்டபம் கழுத்து என்பதாக ஐதீகம்.

இரண்டாம் பிரகாரம் நலம்பலம் அல்லது சுற்றம்பலம்  என்றழைக்கப்படுகின்றது. இந்த சுற்றும் செவ்வக வடிவமாகவே உள்ளது. இச்சுற்றில்  கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள பகுதி  மட்டும் மற்ற மூன்று பக்கங்களை விட நீளமாக இருப்பதால் வலியம்பலம் என்றழைக்கப்படுகின்றது. நலம்பலம் கரங்கள் என்பது ஐதீகம். பொதுவாக  நடுவில் வலம் வருவதற்கு ஏதுவாக கற்களால் சுற்றுப்பாதை அமைத்துள்ளனர் மற்றபடி மணல் வெளியாகவே உள்ளது.

திருமடப்பள்ளி பொதுவாக தென்கிழக்கில் அமைந்துள்ளது. இவர்கள் திடப்பள்ளி என்றழைக்கின்றனர். நலம்பலத்தின் வடகிழக்கு மூலையில் கிணறு அமைந்துள்ளது இதன் தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும், நைவேத்தியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. நலம்பத்தின் வெளி சுவற்றில் வரிசை வரிசையாக பித்தளை விளக்குகள் அமைத்துள்ளனர் .சில ஆலயங்களில் நலம்பலத்திற்கு வெளியே தனியாகவும் விளக்கு மாடங்கள் அமைந்துள்ளன. கேரளக் கோவில்களில்  மாலை நேரத்தில் லட்சக்கணக்கான  எண்ணெய்  விளக்குகளும் ஏற்றப்பட்டு திருக்கோவில்களை சேவிப்பதே ஒரு அருமையான அனுபவம் ஆகும்.

வலியம்பலத்திற்கு முன்பாக பெரிய பலி பீடம் உள்ளது. பலி பீடத்திற்கு முன்னே கொடிமரம். இரண்டிலும் அஷ்டதிக் பாலகர்கள், அல்லது அஷ்ட லக்ஷ்மிகளின்  சிற்பங்கள்  அமைத்துள்ளனர். கொடி மரம் முதுகெலும்பு என்பது ஐதீகம். பல ஆலயங்களில் நெடிதுயர்ந்த கொடி மரங்கள் தங்கக் கவசம் பூண்டு எழிலாக மின்னுகின்றன. பொதுவாக செப்பு தகட்டால் மூடப்பட்டவையாகவே கொடி மரங்கள் உள்ளன. கொடிமரத்திற்கு முன்புறம் ஸ்ரீகோவிலை நோக்கியவாறு ஆனகொட்டில் மண்டபம் உள்ளது. உற்சவ காலங்களில் யானைகள் இங்கே நிற்கின்றன. மேலும் சோறுண்ணு, துலாபாரம், திருமணம் முதலிய சடங்குகள் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. பொதுவாக கொடி மரத்திற்கு அருகில்  நெடிதுயர்ந்த பித்தளை விளக்குகளைக் காணலாம். கூர்ம பீடத்துடன் அமைந்துள்ள இந்த விளக்குகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

இரண்டாம் பிரகாரம்  பிரதக்ஷிண வட்டம் என்றழைக்கப்படுகின்றது. இது வயிறு என்பது ஐதீகம். அடுத்த சுற்றில் பெரிய  மதில் சுவர் ஆலயத்தை காக்கின்றது, மதில் சுவர் கால்கள் என்பது ஐதீகம். மதில் சுவற்றில் நான்கு திசைகளிலும் பொதுவாக கேரளப்பாணி சாய்ந்த கூரைகள் கொண்ட எளிய  தோரண வாயில்கள் அமைந்துள்ளனகோபுரம் சிறிதாக எளிமையாக  பொதுவாக கேரள பாணியில் அமைந்துள்ளன. முன் கோபுரம் பாதம் என்பதாக ஐதீகம். சில ஆலயங்களில் இச்சுற்றில் தூண்களில் விளக்கேந்திய பாவைகள்  எழிலாக அமைத்துள்ளனர். ஒரே வரிசையில் ஒரே மாதிரியாக அமைந்துள்ள சிலைகளை பார்ப்பதே ஒரு பரவசம். இரண்டாம் சுற்றில் பல் வேறு மரங்கள், நந்தவனங்கள் உள்ளன. மற்ற  விநாயகர், சாஸ்தா சிவன், பகவதி  சந்நிதிகளும் இச்சுற்றில்  பொதுவாக அமைந்துள்ளன. சில ஆலயங்களில் சீவேலிபுரம் என்னும் ஒரு  சுற்றும் அமைந்துள்ளது. கற்றளியாக இல்லாமல் மரம் மற்றும் ஓடுகள் கொண்டு இயற்கையை ஒட்டி எளிமையாக  இவை அமைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு. மதில் சுவர் மட்டும் இங்கு கிட்டும் சிவப்புக்கல் (Laterite) கொண்டு பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர்.

மதில்சுவர், சீவேலிபுரம், விளக்கு மாடம், நலம்பலம், அந்தராளம்  என்னும் ஐந்து பிரகாரங்கள் ஸ்தூல சரீரத்தின் பஞ்சகோசங்களாகின்றன. தெய்வமூர்த்தமும் ஆறு ஆதாரங்களான ஆதாரசிலா, நிதி கும்பம், பத்மம், கூர்மம், யோகநாளம் மற்றும் நபும்சக சிலா ஆகியவை ஸூஷ்ம சரீரம் ஆகின்றது. இவ்வாறு ஒவ்வொரு திருக்கோயிலும் மனித உடலை போல அமைந்துள்ளது.

இவர்கள் இந்த பஞ்சப் பிரகாரங்களை இவ்வாறு அழைக்கின்றனர் 1. அகத்தே  ஸ்ரீகோவில், பலிவட்டம், 2. நலம்பலம் – சுட்டம்பலம், 3. மத்யஹார; விளக்கு மாடம், 4. புறத்தே பலி வட்டம் - சீவேலிபுரம், 5. புறம்- மதில்


 திருப்புலியூர் -மாயப்பிரான் 

புதிது புதிதாக நினைத்த இடத்தில் சந்நிதிகளை அமைக்காமல் ஆதி காலத்தில் இருந்ததைப் போலவே அப்படியே பாதுகாக்கின்றனர். எல்லா ஆலயங்களிலும் பொதுவாக நந்தவனங்கள் உள்ளன. மேலும் ஊட்டுப்புரம் என்னும் அன்னக்கூடம், கதகளி முதலிய  கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்  கூத்தம்பலம் மற்றும் கோவிலுக்கு வெளியே திருக்குளம் எல்லாம் பொதுவாக அனைத்து ஆலயங்களிலும்  அமைந்துள்ளன.  
எழிலான சூழ்நிலையில் அமைந்துள்ள திருக்கோவிலை மிகவும் தூய்மையாக பராமரிக்கின்றனர். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். நேரம் தவறாமல் சரியாக அனைத்து வழிபாடுகளையும் நடத்துகின்றனர். யாருக்காகவும், எதற்காகவும் பூஜை விதிகளை மாற்றுவதில்லை என்பது பாராட்டுக்குரியது. திருக்கதவை பூஜை செய்த பின் அடைத்து விட்டால் எதற்காகவும் பின் திறப்பதில்லை. மலர்கள், நைவேத்யம் மற்றும் எந்த பூஜைப் பொருளையும் கையில் வாங்குவதில்லை, கீழே வைக்க சொல்கின்றனர். யாரும் தங்களைத் தொட்டு விடக்கூடாது என்பதில் போத்திகள்  மிகவும் கவனமாக உள்ளனர்.   எந்தக் கோவிலிலும் கர்ப்பகிரகத்தில் மின் விளக்குகளை பயன்படுத்துவதில்லை. நெய் விளக்குகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. கேரளத்திற்கே உரித்தான மூன்று கிளை விளக்குகள் மற்றும் சர விளக்குகளின் ஒளியிலேயே நாம் பெருமாளை திவ்யமாக சேவிக்கின்றோம். கண்ணாடி தேவைப்படுபவர்கள் கண்டிப்பாக கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் முக்கியம்.

இவர்கள் சட்டையைச் சட்டை செய்வதில்லைஇந்த அம்பலங்களுக்குள் ஆண்கள்  மேல் சட்டை, பனியன், கால் சட்டை  அணிந்து செல்ல அனுமதி இல்லை, கைலி அணிந்து கொண்டும் செல்ல முடியாது. கரங்களில் மூட்டை முடிச்சுகளை எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை வெளியே வைத்து விட்டுதான் செல்ல வேண்டும்.   மிகச் சில ஆலயங்களில் மட்டுமே பெண்கள் சுடிதார் அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர் பெண்களுக்கும் கேரள பாணி முண்டு அல்லது சேலை அணிவது அவசியம். இந்த விதி அனைவருக்கும் பொது அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் இந்த விதியை தளர்த்துவதில்லை.


இராம பட்டாபிஷேக ஓவியம்- திருமூழிக்களம் 

அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறந்து விடுகின்றனர்.  இங்கு ஆராதனைகள் எல்லாம் கேரள முறையில் நடைபெறுகின்றன. ஆராதனை செய்யும்  கேரள பிராம்மணர்கள் போத்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். தலைமை அர்ச்சகர் மேல்சாந்தி என்றும் அவரது உதவியாளர்கள் தந்திரிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உடம்பில்  திருமண் அணிவதில்லை நெற்றியில் சந்தனம்  மட்டுமே அணிகின்றனர். இக்கோவில்களில் பெருமாள்  பிரசாதமாக தீர்த்தமும், சடாரியும் கிடையாது. மிழ்நாட்டில் பூஜை செய்வது போல் அர்ச்சனைகளை வாயால் உச்சரிப்பது இல்லை. வாய்க்குள்ளேயே மந்திரங்களை சொல்லிக் கொண்டு கையினால் ஆவாஹனம் செய்து கை செய்கையாலேயே பூஜை செய்கின்றனர், பின்னர்  வெளியே வந்து அமர்ந்து ஒரு வாழை இலையில் சிறிது சந்தனமும், துளசியும் மலர்களும் பிரசாதமாக வழங்குகின்றனர். சில ஆலயங்களில் சிறிது விபூதியும் சேர்த்து வழங்குகின்றனர்.  பொதுவாக தட்சிணை தருபவர்களுக்கு இலையில் பிரசாதம் வழங்குகின்றனர் இல்லாவிட்டால் சிறிது சந்தனம் கரங்களில் வழங்குகின்றனர். அதிகமாக எதுவும் பேசுவதில்லை மிகவும் சுத்தமாகவும் நியமத்துடனும் பூஜை செய்கின்றனர். யாரும் வீண் பேச்சு பேசுவதில்லை, எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, சிறப்பு தரிசன கட்டணம் வாங்கிக் கொண்டு பெருமாளின் அருகில் சென்று சேவிக்க வைக்கும் பழக்கம் இல்லை அனைவரையும் சமமாக நடத்துகின்றனர்.   சில ஆலயங்களில் மட்டுமே  நாம் தரும் நைவேத்யங்களை பெருமாளுக்கு படைக்கின்றனர். இங்கு நடத்தப்படும் பூஜைகள் எல்லாம் வழிபாடுகள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு கட்டணம் உள்ளது. வெடி வழிபாடு என்று வேட்டுப்  போடும் வழிபாடு புதுமையாக உள்ளது. பொதுவாக ஒரு சில ஆலயங்களை தவிர்த்து அனைத்து ஆலயங்களிலும் அதிக கூட்ட நெரிசலும் வரிசைகளும் இல்லை, எனவே எவ்வளவு சமயம் வேண்டுமென்றாலும்  மனப்பூர்வமாக பெருமாளை சேவிக்க முடிகின்றது.
விளக்கு மாடத்துடன் சுற்றம்பலம் 

இனி அனுதினம் நடைபெறும் வழிபாட்டு முறை என்னவென்று காணலாமா? அதிகாலையிலேயே 4 மணிக்கே நடை திறக்கப்படுகின்றது. மேல்சாந்தி நீராடி ஈர உடையுடன் நடை திறக்கின்றார்.   பின்னர் இறைவனை எழுப்பும் பள்ளியுணர்த்தல், முதல் நாள் அலங்காரத்தில் நிர்மால்ய தரிசனம்”, பின்னர் முந்தைய தின அலங்காரத்தை கலைத்து தைல அபிஷேகம் பல மூலிகைகளினால் தயாரிக்கப்படும் இந்த  தைலம் பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இந்த தைலம் நோய் தீர்க்கும் மருந்தாகின்றது. பின்னர்  பொடி வாக்கச் சார்த்தல், அபிஷேகம், மலர் நைவேத்யம் (புட்டு, வெல்லம் மற்றும் கதலி பழம்) கணபதி ஹோமம், பிரசன்ன பூஜை, சூரியோதய காலத்தில்  உஷ பூஜை, இப்பூஜையின் போது பெருமாளுக்கு வெண்ணெய், சர்க்கரை, பழம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. இரண்டாவது பூஜை சுமார் 6 மணிக்கு நடைபெறுகின்றது எதிர்த்து பூஜை(சூரியனை எதிர் கொள்ளுதல்) என்றழைக்கப்படுகின்றது, அதற்கப்புறம் எதிர்த்து சீவேலி, இப்பூஜை சமயத்தில் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னதிகளிலும் பூஜை நடைபெறுகின்றது காலை 8 மணி முதல் 9  மணிக்குள் பந்தீரடி பூஜை(சூரியனின் நிழல் பன்னிரண்டடி விழும் சமயம்), தாரா,  பால், இளநீர். பன்னீர் ஆகியவற்றாலும் நவாகம் எனப்படும் ஒன்பது கலசங்களில் உள்ள புனித நீராலும்  அபிஷேகம், பஞ்ச கவ்யம், பின்னர் சந்தனக் காப்பு அலங்காரம். உச்சிக்காலத்தில் உச்ச பூஜை”, பெருமாளுக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகின்றது, உச்ச சீவேலி”, சுமார் 11 மணிக்கு நடை அடைத்தல். ஸ்ரீபலி என்பதே மருவி சீவேலி ஆகிவிட்டது.

பின்னர் மறுபடியும் மாலை 4 மணிக்கு  நடை திறத்தல், தீபாராதணை இச்சமயத்தில் விளக்கு மாடத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. தீபாராதணை நடக்கும் போது பெருமாளை சேவிப்பதே ஒரு அருமையான அனுபவம் ஆகும். வெகு தூரத்தில் இருந்து கூட பெருமாளை திவ்யமாக இச்சமயத்தில் சேவிக்கலாம். பின்னர் பகவதி சேவை, அத்தாழ பூஜை, இப்போது அப்பம், அடை மற்றும் தாம்பூலம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. அத்தாழ சீவேலி”, பிறகு திருப்புகை, அஷ்ட கந்தம் என்னும்  எட்டு மணப்பொருள்களால் பு|கையூட்டப்பட்டு, இரவு 8 மணிக்கு  நடை அடைக்கபடுகின்றது. இவ்வாறு  ஐந்து கால பூஜைகளும் மூன்று சீவேலிகளும் தினமும் கிரமமாக நடைபெறுகின்றது.

சீவேலியின் போது பலி உற்சவரை தலையில் அல்லது கரத்தில்  சுமந்து  கை விளக்கு, மேள தாளத்துடன் அந்தராளம் சுற்றி வருகின்றனர். மிகவும் வேகமாக ந்து செல்கின்றனர். சில ஆலயங்களில் யானையிலும் உற்சவ பலி மூர்த்தி எழுந்தருளுவார். இது  பலி சமர்ப்பிக்கும் போது பெருமாளே தனது அன்பர்களுக்கு   சரியாக பலி கிடைக்கின்றதா? என்று அன்புடன் கவனிப்பது    போல உள்ளது. மழை அதிகமாக செய்யும் பிரதேசம் என்பதால் மழை பெய்யும் போது கூட தாழங்குடை பிடித்துக்கொண்டு சீவேலி சமயத்தில் பலி சமர்ப்பிக்கின்றனர். சீவேலி சமயத்தில் கொடிமரத்தைத் தாண்டி  யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. கோயில் பணியாளர்கள் அனைவரும்  தங்கள் பணிகளை செம்மையாக செய்கின்றனர். உற்சவங்களின் போது யானைகள், தாளம் போட வைக்கும்  செண்டை மேளம் எனப்படும் பஞ்சவாத்தியங்கள், வர்ணக்குடைகள்,  வாண வேடிக்கை ஆகியவை கேரளாவின் சிறப்பு ஆகும்.  வாருங்கள் இனி ஒவ்வொரு திவ்ய தேசமாக சேவிப்போம்.


மலை நாட்டு திவ்யதேச வழிகாட்டி

இந்த திவ்ய தேசங்கள் எல்லாம் கேரளா முழுவதும்  வடக்கில் இருந்து தெற்கு வரை அமைந்துள்ள,  பல திவ்யதேசங்கள் முக்கிய சாலைகளை அடுத்த  சிறு கிராமங்கள் என்பதாலும் கார், வேன் போன்ற சொந்த வண்டிகளை  அமர்த்திக்கொண்டு செல்வது நல்லது. இவ்வாறு சென்றாலும் அனைத்து திவ்ய தேசங்களை மட்டுமே சேவிக்க  குறைந்தது மூன்று நாட்களாவது வேண்டும். அடியேனின் அனுபவம் ஆலயங்களின் நடை சார்த்தும் நேரம் சரியாக கடைப்பிடிக்கப்படுவதால் ஒரு நாள் அதிகப்படியாக வைத்துக்கொண்டு பயணம் செல்வது உத்தமம். பேருந்து மூலமாக செல்ல விரும்பினால் அருகில் உள்ள பெரிய ஊர்களில் தங்கிக்கொண்டு பின்னர் பேருந்து மூலம்  பயணம் செய்து சேவிக்கலாம் ஆனால் நடை அடைப்பதற்கு முன் சென்று விடவேண்டும். ஒவ்வொரு திவ்ய தேசத்திற்கும் அருகில் உள்ள பெரிய ஊர் விவரங்கள் மற்றும் செல்லும் வழியில் உள்ள மற்ற சிறப்பு மிக்க  ஆலயங்கள் பற்றிய சிறு குறிப்புகளும்  இந்நூலில் உள்ளன

மூன்று நாட்கள் அதிகாலை விஸ்வருப தரிசனம் முதல்,  இரவு அத்தாழ பூஜை வரை அனைத்து பூஜைகளையும் பெருமாளின் பல் வேறு அலங்காரங்களையும் பல சீவேலிகளையும் பல்வேறு ஆலயங்களில் காணும் ஒரு பாக்கியம் இந்த யாத்திரையின் போது  கிட்டியது.

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்தளூருறை எந்தை பெம்மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத்தடிகளை
எவ்வுள் மாயனை தெய்வ நாயகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே!
ஓதநீர் ஞாலத்துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்திடுவதே 

என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மங்களாசாசனம் செய்த மாயவன், கண்ணன், மணிவண்ணன், கேசவன், மண்ணும் விண்ணும் தாயவன், கமல நயனன், சரத்தால் இலங்கை தீயவன், திருவேங்கடத்துறை தூயவனின் சேவையை  அனுபவிப்போம் அன்பர்களே.

 

மலை நாட்டு திவ்ய தேசங்கள்

திவ்ய தேசம்

அருகில் உள்ள இரயில் நிலையம்

தூரம்

 தங்க   அருகில் உள்ள பெரிய    ஊர்

தூரம்

திருவித்துவக்கோடு

பட்டாம்பி

6 கி.மீ

சொரனூர்/ பாலக்காடு

18 /60 கி.மீ

திருநாவாய்

குட்டிபுரம்

7 கி.மீ

தேவசம் போர்ட் விடுதிகள் உள்ளன.

 

திருமூழிக்களம்

அங்கமாலி

10 கி.மீ

அங்கமாலி

10 கி.மீ

திருகாட்கரை

ஆலுவா

10 கி.மீ

எர்ணாகுளம்/ சோட்டாணிக்கரை

10 கி.மீ/ 15 கி.மீ

திருவல்லா

திருவல்லா

5 கி.மீ

செங்கண்ணூர்

10 கி.மீ

திருக்கடித்தானம்

செங்கணச்சேரி

3 கி.மீ

செங்கண்ணூர்

16 கி.மீ

திருச்சிற்றாறு

செங்கண்ணூர்

1 கி.மீ

செங்கண்ணூர்

1 கி.மீ

திருப்புலியூர்

செங்கண்ணூர்

5 கி.மீ

செங்கண்ணூர்

5 கி.மீ

திருவாறன்விளை

செங்கண்ணூர்

5 கி.மீ

செங்கண்ணூர்

5 கி.மீ

திருவண்வண்டூர்

செங்கண்ணூர்

1 கி.மீ

செங்கண்ணூர்

1 கி.மீ

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

1 கி.மீ

திருவனந்தபுரம்

1 கி.மீ

திருவாட்டாறு

குழித்துறை

5 கி.மி

மார்த்தாண்டம்/ குலசேகரம்

7 கி.மீ/ 6 கி.மீ

திருவண்பரிசாரம்

நாகர்கோவில்

5 கி.மீ

நாகர்கோவில்

5 கி.மீ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரே தடவையில் வண்டியில்  இவ்வாறாக சென்றால், மூன்று நாட்களில் அனைத்து திவ்ய தேசங்களையும் சேவிக்க இயலும்.

1.     தங்கள் ஊரிலிருந்து கோயம்புத்தூர்.

2.     கோவை – பாலக்காடு                                                                                         54 கி.மீ

3.     பாலக்காடு – சொரனூர்                                                                                      50 கி.மீ

4.     சொரனூர் – பட்டாம்பி                                                                                         12 கி.மீ

5.     பட்டாம்பி – திருமித்தக்கோடு( திருவித்துவகோடு)                                    08 கி.மீ

6.     திருமித்தக்கோடு – திருநாவாய் (குட்டிபுரம் வழி)                                     40 கி.மீ

7.     திருநாவாய் – திருச்சூர் (குன்னங்குளம் வழி)                                              60 கி.மீ

8.     திருச்சூர் – திருமொழிக்களம்( திருமூழிக்களம்)                                     50 கி.மீ  அல்லது

9.     திருநாவாய் – குருவாயூர் – கொடுங்கல்லூர்- திருமூழிக்களம்               115 கி.மீ

10.  திருமூழிக்களம் திருக்காக்கர( திருக்காட்கரை)                                    25 கி.மீ

11.  திருக்காக்கர – எர்ணாகுளம்                                                                             10 கி.மீ    (இரவு தங்கல்)  

12. எர்ணாகுளம் – செங்கணச்சேரி – திருக்கடித்தானம்                                    85 கி.மீ

13.  திருக்கடித்தானம் – திருவல்லா                                                                    07 கி.மீ

14.  திருவல்லா – செங்கண்ணூர்                                                                           10 கி.மீ

15.  செங்கண்ணூர் – திருசிற்றாறு                                                                        01 கி.மீ

16.  செங்கண்ணூர் -  திருப்புலியூர்                                                                       05 கி. மீ

17.  செங்கண்ணூர் – ஆரண்முழா (திருவாறன்விளை)                                    11 கி.மீ

18.  செங்கண்ணூர் – திருவண்வண்டூர்                                                               01 கி.மீ

19.  செங்கண்ணூர் – திருவனந்தபுரம்  (வழி கொட்டாரக்கர)                 110 கி.மீ  (இரவு தங்கல்)  

20.  திருவனந்தபுரம் – திருவாட்டாறு  ( வழி மார்த்தாண்டம்)                 60 கி.மீ

21.  திருவாட்டாறு – திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம் , வழி தக்கலை)   30 கி.மீ

22.  திருப்பதிசாரம் – நாகர்கோவில்                                                                      08 கி.மீ

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

2 comments:

ப.கந்தசாமி said...

நல்ல ஆரம்பம். தொடர்கிறேன்.

S.Muruganandam said...

வாருங்கள் ஐயா அருமையான தரிசனம் பெறலாம்.