Thursday, August 25, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 4

குருவாயூரப்பன் தரிசனம்


இன்றைய தினம் கண்ணன் பிறந்த ஸ்ரீஜெயந்தி என்பதால் மலை நாட்டின் புகழ் பெற்ற கிருஷ்ணத்தலமான குருவாயூரப்பனை சேவிக்கலாம் அன்பர்களே. 


திருநாவாய் மற்றும் திருவித்துவக்கோடு திவ்விய தேசங்களை சேவித்த பின் அடியோங்கள் சென்ற அபிமான ஸ்தலம் குருவாயூர். இத்திருத்தலத்தின் சிறப்பை அனைவரும் நன்றாக அறிவர் என்பதால் இங்கு விரிவாக கூறவில்லை. நாள் ஒன்றுக்கு இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயில் ஆகும். குருவாயூரப்பன் ஆலய வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. நாரத புராணத்தில் இக்கோவிலின் வரலாறும், தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன. தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரே வழிபட்ட இந்த விக்ரகத்தை, தனது அவதார காலம் முடிந்து வைகுண்டம் திரும்பும் போது உத்தவரிடம் கொடுத்து ஒரு புனிதமான இடத்தில் பிரதிஷ்டை செய்யக் கூறினார். துவாரகையை கடல் கொண்டபின் குருவும் வாயுவும் இணைந்து பரசுராமரின் வழிகாட்டுதலின் படி இங்கு பிரதிஷ்டை செய்தனர். எனவே இந்த தலம் குருவாயூர் என்றழைக்கப்படுகின்றது.


அப்போது ருத்ர தீர்த்தத்தின் இக்கரையில் இருந்த சிவபெருமானும் பார்வதியும் பெருமாளுக்கு இத்தலத்தை கொடுத்துவிட்டு மறு கரையில் உள்ள மம்மியூருக்கு சென்று விட்டனராம். ஆகவே குருவாயூர் யாத்திரை வருபவர்கள் மம்மியூர் சென்று சிவனை தரிசித்தாலே யாத்திரை முழுமையடையும் என்பது நம்பிக்கை. தற்போது பகவதி சன்னதியை சுற்றி வரும் போதே மம்மியூர் உள்ள வடப்பக்கம் திரும்பி நின்று வழிபாடு செய்கின்றனர் பக்தர்கள். பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சதுர்புஜராக நின்ற கோலத்தில் பால ரூபத்தில் சேவை சாதிக்கின்றார், மேலிரண்டு திருக்கரங்களில் சங்கு மற்றும் சக்கரமும், கீழிரண்டு திருக்கரங்களில் கதையும், தாமரையும் கொண்டு துளசி, முத்துமாலைகள் கழுத்தில் தவழ, கிரீடம், மகரகுண்டலம், கேயூரம், கங்கணம், உதரபந்தனம் அணிந்து, வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துப மணியும் இலங்க எழிலாக சேவை சாதிக்கின்றார் குருவாயூரப்பன். மிகவும் புனிதமானது எனக்கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த மலை நாட்டு திவ்யதேச யாத்திரையில் சதுர்புஜத்துடன் நின்ற கோலத்தில் பல பெருமாள்களை சேவித்த போது குருவாயூரப்பனை சேவித்தது போலவே இருந்தது. குருவாயூரப்பனுக்கு சார்த்தும் அந்த மயிற்பீலி கிரீடமும், மலர் அலங்காரம் மற்றும் மயிற்பீலி விசிறி அலங்காரமும் எப்போதும் நம் கண்ணில் நிற்கின்றன.


குருவாயூரப்பனை சேவிக்கும் போது 
 குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
 உன் கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா…. 
உலகம் என்னும் தேரினையே ஓடச்செய்யும் சாரதியே 
 காலம் என்னும் சக்கரமே உன் கையில் சுழலும் அற்புதமே
 எங்கும் உந்தன் திருநாமம் எதிலும் நீயே ஆதாரம் உன் 
சங்கின் ஒலியே சங்கீதம் சரணம் சரணம் உன்பாதம் 

 என்ற பாடல் வரிகள் நம் காதில் ரீங்காரமிடுகின்றதல்லவா? கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் குருவாயூரப்பனிடம் நாமும் சரணமடைவோம். கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் உயரமான தீபஸ்தம்பங்கள் கண்களைக் கவர்கின்றது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும் போது காணக் கண் கொள்ளா காட்சியாகும். ஸ்ரீகோவிலின் சாய்ந்த கூரைகளில் தங்க ஓடுகள் மின்னுகின்றன. சுவர்களில் அருமையான இயற்கை ஓவியங்கள் இன்றும் புதிதாக காட்சி தருகின்றன, கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் இவற்றில் தீபம் ஏற்றப்பட்டு இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது.
 சீவேலி உற்சவர்  

 தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவந் தானே
தமருகந்தது எப்பேர்மற் றப்பேர் – தமருகந்தது
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியா னாம்  (மு.தி 44)

என்று பொய்கையாழ்வார் பாடியபடி அவரவர்களுக்கு தகுந்தபடி சேவை சாதிக்கின்றார் குருவாயூரப்பன். ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மஹாவிஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம், வில்வமங்களம் சுவாமிகள், மானதேவன், குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். ஆயினும் குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்து, இங்கு வழிபடும் பக்தர்களே அதிகம்!. உண்ணி கண்ணன், உண்ணி கிருஷ்ணன், பால கிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வத்தை பலவாறு அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள்.

குருவாயூர் கிழக்கு வாயில் 

அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வ ரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது. குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்! இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர். நிர்மால்ய தரிசனத்தின் போது குருவாயூரப்பனுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக்காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர். விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகைசார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷஸூக்தம் சேவிக்கப்படுகின்றது. இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் திருமஞ்சனம் நடை பெறுகின்றது.

ருத்ர தீர்த்தக்குளம் 

இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியம் செய்கின்றனர் .அப்போது உண்ணிக் கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன். இதன் பின் ஆரம்பமாகும் காலை நேர உஷத்பூஜை நடைபெறுகின்றது. இந்த பூஜையின் போது நெய்ப்பாயசமும், அன்னமும் பிரதான நைவேத்தியம். இது முடிந்து நடைதிறக்கும் போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் அற்புதமாக தரிசனம் தருவார். குருவாயூரப்பனுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும்தான் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்துதிரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரிவிளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். சுற்றம்பல அனைத்து விளக்குகளும் மங்கலமாக எரிய பெருமாளின் ஆரத்தி சேவிப்பதே ஒரு ஆனந்தம். மங்கள ஆரத்தியின் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம். இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் ஆகியவை நைவேத்தியம். ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால்பாயசம், நெய்பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழவகைகள். தினமும் ஐந்து பூசைகளும் மூன்று சீவேலிகளும் நடைபெறுகின்றது. இரவு நடைபெறும் அத்தாழ சீவேலி மிகவும் சிறப்பாக மூன்று யானைகளுடன் நடைபெறுகின்றது நாதஸ்வர இசையுடன் மூன்று முறை சுற்றி வருகிறார் உற்சவ மூர்த்தி. அஷ்ட கந்த புகையிட்டு நடையை அடைப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

வெளிப்பிரகாரம் 

துலாபார நேர்ச்சைக் கடன் இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள். அது போல் குழந்தைகளுக்கு அன்னப்பிரசனம் என்னும் முதல் அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை. எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


இராசலீலை ஓவியம் 

குருவாயூர் என்றவுடன் நாராயணீயத்தை பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. தனது குரு வாத நோயால் துன்பப்படுகிறார் என்று அதை தான் வாங்கிக் கொண்ட நாராயண பட்டத்ரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் அமர்ந்து நின்று தினம் நாராயணீயத்தின் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கிவிட்டது. நாராயணீயத்தின் முதல் ஸ்லோகத்திலேயே பட்டத்திரி ”குருபவன புரே ஹந்தபாக்யம் ஜனானாம்” அதாவது ஏ! குருவாயூரப்பா உன்னை அனுதினமும் அதிகாலை நிர்மால்ய தரிசனம் துவங்கி இரவு நடை அடைக்கும் வரை பல் வேறு அலங்காரத்தில் உன்னை தரிசனம் செய்யும் பக்தர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்று பட்டத்திரி பாடுகின்றார். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி பாடினார். பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல... அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் கூறுவார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் அருள் பெற்ற பரம பக்தர்கள் ஆவார்கள்.

மம்மியூரில்  

குருவாயூர் கோவில் யானைகள் என்றாலே ஒரு தனி சிறப்பு. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டாவில் தேவஸம் போர்டுக்குச் சொந்தமான யானைகள் கொட்டாரம்அமைந்துள்ளது. குருவாயூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த யானைகள் கொட்டாரத்துக்கும் வந்து பார்த்து மகிழ்கிறார்கள்.

ஆனக்கொட்டில்

அடியோங்கள் இந்த யாத்திரையின் போது குருவாயூரப்பனை வேணு கோபாலனாக திவ்யமாக சேவித்தோம். பின்னர் மதிய உணவை குருவாயூரிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து திருஅஞ்சைக்களம் அருகில் உள்ள குலசேகராழ்வாரின் அவதார ஸ்தலத்தை சேவிக்கப் புறப்பட்டு சென்றோம்.


 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: