Wednesday, September 7, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 9

திருவண்வண்டூர் – பாம்பணையப்பன்




பஞ்ச பாண்டவர்களில் நகுலன் வழிபட்ட தலம், நாரதருக்கும், மார்க்கண்டேயருக்கும் பெருமாள்  பிரத்யக்ஷம். கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையின் வடபால் அமைந்த தலம்.  எனவே நம்மாழ்வாரும் இத்திருப்பதியை  “தேறுநீர் பம்பை வடபாலைத்  திருவண்வண்டூர்” என்று பல்லாண்டு பாடியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சித்திரம்

பாண்டவர்களில் நகுலன் புனர் நிர்மாணம் செய்து வழிபட்ட ஆலயம் என்பதால்  பாண்டவர் ஊர் என்பதே வண்வண்டூர் என்று மருவி இருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. திருவன் என்ற மலையாளச் சொல்  திருமாலைக் குறிக்கின்றது எனவே திருவன்+உண்டு+ஊர் என்பதே திருவண்வண்டூர் ஆகியதாகவும் ஒரு கருத்து உள்ளது.



செங்கண்ணூரிலிருந்து வடக்கே 6 கி.மீ  தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  தற்போது திருவமுண்டூர் என்றழைக்கப்படுகின்றது. எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் செங்கண்ணூரில் இறங்கி பின்னர் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம்.  தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை.   திருவல்லாவில் இருந்து  வந்தும் சேவிக்கலாம்.

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்!
விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண்வண்டூர்
 
கடலின் மேனிப்பிரான் கணணனை நெடுமாலைக்கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே
 ( தி.வா.6-1-4 )

பொருள்: பிரிவு இல்லாத போகத்திலே மூழ்கிச் சேர்ந்து அனுபவிக்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! குளிர்ந்த திருவண்வண்டூரில் பிரிதல் இல்லாத வேதத்தின் ஒலியானது  ஒலித்துக் கொண்டிருக்கும்; அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் கடல் போன்ற நிறத்தை உடையவன், உபகாரகன்; கண்ணபிரான்; அந்த நெடிய திருமாலைக் கண்டு ஒரு பெண்ணானவள் உடல் நிலைகுலைந்து உருகுகின்றாள் என்று உணர்த்துங்கோள் என்று ம்மாழ்வார்,   புருஷோத்தமான இராமன் ரக்ஷண தைர்யம் அதாவது தன்னை சரணடைந்தவர்களை காக்கும் உறுதி என்னும் தன் குணத்தை மறந்து தன்னை இரட்சிக்க மறந்து விட்டார் என்று  பறவைகளையும் வண்டையும் தூது விடும் பாவத்தில் மங்களாசாசனம் செய்த திருவண்வண்டூரின்

மூலவர் - பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - கமலவல்லி நாச்சியார்.
தீர்த்தம் - பம்பா தீர்த்தம்.
விமானம் - வேதாலய விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், நாரதர்.

மூலவரின் திருநாமம் பாம்பணையப்பன், என்றாலும் பெருமாள் சதுர் புஜங்களுடன் நின்ற கோலத்தில்தான் சேவை சாதிக்கின்றார். பம்பையின் வடபால் அமைந் ஆலயம் என்பதால் பம்பை அணை என்பதே பாம்பணையாக மருவியிருக்கலாம் என்றொரு கருத்து உண்டு. எனவே இத்தலம் ”பம்போத்தர க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.  ஆதி சேஷனின் அரவணைப்புடன் அருள் பாலிப்பவர் என்பதால் இந்த திருநாமம் என்பாரும் உண்டு. ம்மாழ்வார் இப்பெருமாளை   பக்தர்களை இரட்சிக்க உறுதி கொண்ட புருஷோத்தமனாக, இராமனாக அனுபவிக்கின்றார். 

பிரம்மதேவர் சனகாதியர்கள் நால்வரையும் சிருஷ்டியை விருத்தி செய்வதற்காக படைத்தார், அவர்களுக்கு நாரதர் ஞானத்தை போதித்தார்  எனவே  அவர்கள் தவ வாழ்வை மேற்கொண்டனர்,  அதனால் பிரம்மதேவன்  நாரதர் மேல் கோபம் கொண்டு "நீ எந்த இடத்திலும் நிலையாக இருக்க முடியாது"  திரிலோக சஞ்சாரியாகக் கடவது என்று சாபமிட்டார். இதனால் நாரதர் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் இத்தலத்திற்கு வந்தார் அப்போது அவருக்கு ஒரு அமைதி கிட்டியது எனவே அவர் இங்கேயே  தங்கி  நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். நாரதர் இரண்டு வரங்களை வேண்டினார். முதலாவது இத்தலத்திலேயே தான் இருக்க வேண்டும், இரண்டாவது தமக்கு தத்துவ ஞானம் உபதேசிப்பதே தொழிலாக வேண்டும்' என்று வேண்ட, பகவானும் அவ்விரண்டு வரங்களையும் அளித்தார்.  பின்னர்   நாரதர் மகாவிஷ்ணுவே பரதத்துவம் என்று நிறுத்தி, அவரை பூஜிக்கும் முறை, துதி முதலியனவற்றை பெருமாள் அருளியபடி இருபத்தைந்தாயிரம் கிரந்தங்களில் நாரதீய புராணத்தை எழுதியதாக தல புராணம் கூறுகின்றது.


தங்கக் கொடிமரம் 

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவரும் தவம் செய்து பிரளயம், ஜகத் சிருஷ்டி ஆகியவற்றை தரிசிக்க வேண்டும் என்று வேண்ட, 

கரார விந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவஶயந்தம் |
வடஸ்ய பத்ரஸ்ய புடேஶயாநம் பாலம் முகுந்தம் ஸ்மராமி ||


என்றபடி பிரளய  காலத்தில் அனைத்து உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கி ஓர் ஆலிலையில் தனது தாமரைப் போன்ற திருப்பாதவிரலை தாமரைப்போன்ற திருக்கரத்தினால் தாங்கி விரலைச் சுவைத்த வண்ணம் பள்ளி கொள்ளும் அழகை பெருமாளின் திருமேனியில் காணும் பேறு பெற்றார்.
ஆலயத்தை நெருங்கியவுடன் அழகிய அலங்கார முகப்பு வாசல்  நம்மை வரவேற்கின்றது.   உச்சியில்  காளிங்க ர்த்தன  கிருஷ்ணன். அதன் கீழே பெருமாள் கருடன் மேல் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் அருமையான சுதை சிற்பம். இரண்டு பக்கங்களிலும்  நாரதரும், தும்புருவும் இன்னிசை இசைக்கின்றனர். அடுத்து இன்னும் கீழே  ஹயக்ரீவர். இரு பக்கங்களிலும் இரண்டிரண்டு அவதாரங்கள். மச்சம்,  கூர்மம் ஒரு பக்கமும், நரசிம்மரும், வாமனரும்.  கீழே கை கூப்பிய நிலையில் கருடனும் அனுமனும், மேலும் துவார பாலகர்களும் உள்ளனர் இவ்வாறு  முகப்பு வாசல் அருமையாக உள்ளது.  காளிங்கனின்  உடல் வளைஞ்சு நெளிந்து  போய்,  வால் நாரதர் மாடத்துக்கு மேல் எட்டிப் பார்ப்பது அருமையாக உள்ளது. மறு புறம் பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணன், வராக அவதாரங்களும், கீதோபதேச  காட்சி, பிரம்மா, ஐயப்பன் என்று அழகோ அழகு!  தூண்களுடன்  சிறிதாக  இரண்டு திண்ணைகள்  கதவுக்கு இருபுறமும் மிகவும் அருமை.


அருமையான முகப்பு - முன்புறம் 
பின்புறம் 
 படங்களுக்கு  நன்றி - துளசியம்மா


பெரிய கோவில் என்றாலும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது. அன்னதான மண்டபத்தில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் நடைபெறுகின்றது. வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தனிச் சன்னிதியில் அழகாக கொலுவிருக்கிறார். கையில் வெண்ணெயுடன் காட்சி தரும் இந்த  பாலகிருஷ்ணனை, நவநீத கிருஷ்ணன் என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த சன்னதி அமைந்திருக்கும் மண்டபத்தில், மேலே சிறு சிறு தொட்டில்களும், மணிகளும் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அடுத்து ஒரு உயரமான பீடத்தில் நாக நாராயணன், நாகராஜன், நாக யக்ஷி ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய மஞ்சள் பூசி, பக்தர்கள் தம் பக்தியைத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சகர், அவர்கள் சார்பில் அர்ச்சனை செய்து, மஞ்சள் பொடியையே பிரசாதமாக தருகிறார். 

வெளிப் பிராகாரத்தில் கணபதிக்கென்று சிறு சன்னதி. அடுத்து கோசாலை கிருஷ்ணர். இந்த விக்கிரகம், இத்தல தீர்த்தத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். ஒரு சிறு கிணறாக, கோயிலுக்குப் பின்னால் விளங்குகிறது இந்தத் தீர்த்தம். அருகில் பிரமாண்டமான அரசமரம்  நிழல் தந்து குளிர்விக்கிறது; பிராணவாயு தந்து உயிருக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது. சற்றுத் தொலைவில்  சிவன்,  சாஸ்தா சந்நதி. தெற்கில் பகவதியின் சன்னதி உள்ளது.  

மஸ்கார மண்டபத்தில் அருமையாக அனந்த பத்மநாப சுவாமியின் மர சிற்பம் வர்ணத்துடன் அருமையாக உள்ளது. வட்ட வடிவ ஸ்ரீகோவில்  துவிதள (இரண்டடுக்கு) செப்புக் கவசம் பூண்ட தொப்பி வடிவ விமானம். சுட்டு விளக்குகள் எழிலாக தொங்குகின்றன.  மூலவர் சந்நதி மேற்கு நோக்கியிருக்கிறது. பாம்பணையப்பன் என்று போற்றப்படும் இந்தப் பெருமாள், சிறு உருவில், பள பளவென்று ஜொலிக்கிறார்.  நின்ற கோலத்தில் சங்கு, சக்ர, பத்ம,  கதாபாணியாகச் சேவை சாதிக்கின்றார். அருமையான சந்தனக் காப்பு அலங்காரத்தில் பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.  மூலவர் பாம்பணையப்பனைத் தவிர, இங்கே சன்னதி கொண்டிருக்கும் பிற விக்கிரகங்கள் எல்லாமே கோயிலைப் புனரமைக்க நிலத்தைத் தோண்டிய போது கிடைத்தவை என்கிறார்கள்.  இவ்வாலயத்தில் ஒரு பெரிய மண்டபம் கல்யாண மண்டபமாக உள்ளது. மறுநாள் ஒரு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுரைஒண்கிளியே!
செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர்
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செருவொண் சக்கரம்சங்கு அடையாளம் திருந்தக்கண்டே ( தி.வா 6-1-7 )

பொருள்: வடிவழகிலே சிறந்த கிளியே! எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருவண்வண்டூருக்கு நீ செல்லும் போது  வழியிலே நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகுக்கு ஆட்படாமல் செல்ல வேண்டும், செந்நிறம் பொருந்திய  அவ்வூர் கடற்கரைப் பகுதியில் ஒன்றுக்கொன்று  மாறுபட்ட பல நிறப்பூக்களைச் சொரியும் சோலைகள் உண்டு. இத்தகைய திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பகவானின் அடையாளங்களைக் கேட்டுக்கொள். அவன் கரிய  திருமேனியுடையவன்; சிவந்த வாயும்; திருக்கண்களும், திருக்கரங்களும், திருவடிகளும் உடையவன். போர் செய்யவல்ல  சக்கரம், சங்கு  இவற்றை ஏந்தியவனாகக் காட்சியளிப்பான். இவ்வடையாளங்களின்படியே அவனைக் கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்வாயாக என்று எம்பெருமானைக் கண்டு சொக்கிய நம்மாழ்வாருக்கு அவர் இத்தலத்தில்  காட்டிய கல்யாண குணம் “ரக்ஷண தைர்யம்”  எனப்படும் காக்கும் உறுதியாகும். எவ்வாறு இராமாவதாரத்தில் தன்னை சரணடைந்தவர்களை காத்தாரோ அதே போல ஆழ்வாரையும் காத்தார் என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார்.

தேவும், உலகும் உயிரும் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த இறைகண்டீர் – பூவில்
திருவண்வண் டூர்உறையும் தேவாதி தேவன்
மருவண்வண்டு ஊர்துளவ மால். (நூ. தி 67)

பொருள்: திருவண்வண்டூர் என்னும் திருப்பதியில் நித்திய வாசம் செய்கின்ற தேவர்களுக்கெல்லாம் தேவனான, மணம், வளப்பம் உள்ள, வண்டுகள் மொய்க்கின்ற திருத்துழாய் மாலையை அணிந்த திருமால், தேவர்களையும், உலகங்களையும், விலங்குகளையும், மற்றும் வேறாக நிற்கின்ற அசேதனப் பொருள்கள் அனைத்தையும் படைத்த கடவுளாவான் என்று திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.



ஸ்ரீவித ப்ரமர க்ஷேத்ரே பாபநாச புஷ்கரணி தடே, வேதாலய விமானச் சாயாயாம் ஸ்திதாய ப்ரதீச்யாபிமுகாய, ஸ்ரீமதே கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீபம்பாச்ரயாய(பாம்பணையப்பன்) கமலநாத பரப்ரஹ்மனே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே வம்மின் தொண்டர்களே அடுத்து பீமன் புனருத்தாரணம் செய்த தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத்    திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் என்று நம்மாழ்வார் பல்லாண்டு பாடிய    பெருமாளை சேவிக்கச் செல்லலாம். 
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: