Saturday, December 9, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -9

ஐயப்ப விரதம் 

இப்பதிவுகளையும்  காணலாமே   :        4  5  6  7  8


டுத்து நாம் தரிசிக்கவேண்டிய தலம் எருமேலி ஆகும். எருமேலியிலிருந்து  பெரிய பாதை துவங்குகின்றது. ஐயப்பன் மகிஷியைக் கொன்று  தேவர்களின் குறை தீர்த்தபின் ஐயன் அவள் உடல் மேல் நடனமாடிய தலம்.  ஐயப்பனின் முதல் கோட்டை என்பார்கள். தர்ம சாஸ்தாவின் இரண்டு ஆலயங்களும், ஐயப்பனின் தோழரான வாவர் சுவாமியின் மசூதியும் எருமேலியில் அமைந்துள்ளன.  எருமேலி சாஸ்தாவை தரிசிப்பதற்கு முன்,  ஐயப்ப சுவாமிக்கு மாலை அணியும் போது கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகளைப் பற்றி முதலில் காணலாம் அன்பர்களே பின் பெரிய பாதை யாத்திரையை ஆரம்பிக்கலாம்.  

நாம் எல்லோரும் உய்ய ஐயப்பசுவாமி தானே தவத்தில் அமர்ந்திருப்பதாலும்  சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள் தலையில் இருமுடிக் கட்டு அவசியம் என்பதாலும் ஐயப்பசுவாமியின் விரதம் கடுமையானது. சபரி மலைக்கு செல்ல விழையும் அன்பர்கள் முதலில் மாலை அணிய வேண்டும்.

மாலை அணியும் நாள்:  கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள் கிழமை பார்க்க வேண்டியதில்லை. அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். குறைந்தது 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டியது அவசியம்.

பெண்கள் என்றால் 10 வயதிற்கும் குறைவானவர்கள் அல்லது 50 வயதினருக்கு அதிகமானவர்கள் மட்டுமே மாலை அணியலாம். ஆதி காலத்தில் முழுவதும் காட்டுப் பாதையில் மிகவும் கடினமான யாத்திரை, நினைத்த இடத்தில் படுத்து தூங்கி செல்ல வேண்டியிருந்ததாலும், காட்டு விலங்குகளின்  அபாயம் கருதியும் இவ்விதிமுறை  இருந்திருக்கலாம். 
 மாலை அணியும் முறை:  108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது 54  மணிகள் ருத்திராட்ச மாலையை ஐயப்ப சுவாமியின் டாலருடன் சேர்த்து அணிய வேண்டும். துணை மாலை ஒன்றையும் அணிந்து கொள்ளலாம்.  தாய் தந்தையர் இருந்தால் அவர்கள் கையால் மாலை அணிந்து கொள்வது உத்தமம். இல்லாதவர்கள் பல முறை சபரிமலை சென்று வந்த  குருசாமி கையால் மாலை அணிந்து கொள்ளலாம். இல்லையென்றால் குருசாமியின் அனுமதி பெற்று கொண்டு கோவிலிலோ, விளக்கின் முன்போ அல்லது குருநாதரை வணங்கி அணிய வேண்டும்.

 கடை பிடிக்க வேண்டிய விரதங்கள்: (1) நாள் தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் நீராடி பஜனை,  வழிபாடு செய்ய வேண்டும். (2) பிரம்மச்சரிய விரதத்தை கட்டுப்பாடாக கடை பிடிக்க வேண்டும். (3) காலை மாலை 108 சரணங்கள் துளசி, நாட்டுச் சக்கரை, பால் இவற்றுள் ஒன்றைச் சிறிது வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.


 கன்னி சுவாமிகள் அதாவது முதல் தடவை சபரி மலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கருப்பு உடைகளை அணிய வேண்டும். பழமக்கார சுவாமிகள் நீல நிற ஆடையும், காவி உடையும் அணியலாம். 

மாலை அணிந்த பின் கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக் கூடாது. அனைவருடனும் அன்புடன் பழக வேண்டும், இயற்கையின் படைப்புகள் அனைத்தையுமே இறைவனின் சொரூபமாக நினைக்க வேண்டும். மாலை அணிந்த சுவாமிகள் அனைவரையும் ஐயப்பனாகவே கருதவேண்டும், பேசும் போது சுவாமி சரணம் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.  பார்க்கும் பெண்களை மாளிகைப்புரத்து அம்மனாகவே பாவிக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய பொருட்கள், காரியங்கள்:

 (1) குடைப்பிடிப்பது (2) காலணிகள் உபயோகிப்பது (3) சவரம் செய்து கொள்வது, நகம் வெட்டுவது (4) புலால் உண்பது, மது அருந்துவது (5) பொய்  களவு, சூதாடுதல், போதை வஸ்துகள் கூடாது.

பகல் நேரத்தில் உறங்கக்  கூடாது. இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.

துக்க காரியங்களில் ஜயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது அப்படி கலந்த கொள்ள நேரிட்டால்தான் அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அவ்வருடம் மலைக்கு செல்லக்கூடாது. குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது.


கன்னிசாமிகள் தங்களின் வசதிற்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி  ஐயப்பன்மார்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.     
இரு முடி கட்டும் முறைகள்:

இரு முடிக்கட்டும் பூஜையை வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ நடத்த வேண்டும்.  இரண்டு அறை கொண்ட நீளமான பை ஒன்று செய்த அதில் பூஜை சாமான்கள், கற்பூரம் அபிஷேக, நைவேத்திய சாமான்கள், காணிக்கைப் பணம் இவைகளை முன் கட்டிலும் யாத்திரையின் போது தேவையான உணவுப் பண்டங்கள் பின் கட்டிலும் வைத்துக் கொண்டு பையைத் தலையில் எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் இரு முடி எனப்படும். முன்னால் இருப்பது புண்ணிய முடி, பின்னால் இருப்பது பாவமுடி என்பது ஐதீகம். 

ஐயப்பனின் அபிஷேகத்திற்காக  பசுவின் நெய்யை உருக்கி ஒரு தேங்காயின் கண்ணைத்திறந்து இளநீரை எடுத்து விட்டு அதற்குள் காய்ச்சிய நெய்யை நிரப்பிக் கார்க்கினால் இறுக மூட வேண்டும்.யாத்திரை செல்லும் முறை:
சாஸ்தா பூஜை அன்னதானம் செய்து யாத்திரை புறப்பட வேண்டும். இரு முடிச் சுமந்து வீட்டை விட்டுப் புறப்படும் போது எவரிடமும் விடை பெறக் கூடாது. திரும்பிக் கூடப் பார்ப்பது கூடாது. அனைத்து பொறுப்புகளையும் ஐயப்பன் மேல் போட்டிவிட்டு புறப்படவேண்டும். 

கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்டதிலிருந்து சன்னிதானம் அடையும் வரை தானே தலையிலிருந்து இரு முடியை இறக்கி வைக்கவோ ஏற்றி கொள்ளவோ கூடாது.  குருநாதர் மூலமே இறக்க வேண்டும். ஏற்ற வேண்டும். எருமேலியில் பேட்டை துள்ள வேண்டும், பம்பை நதிக்கரையில் சக்தி பூசை செய்ய வேண்டும். பம்பையில் நீராடும் போது மறைந்த தம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடனளை செய்ய வேண்டும்.   


யாத்திரை முடித்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் அருள் பிரசாத கட்டினைத் தலையில் எந்தியபடியே வீட்டு வாசல் படியில் விடலைத் தேங்காய் உடைத்து பின்னர் இல்லத்தினுள் செல்ல வேண்டும். 

வீட்டினுள் பூஜை அறையில் பூஜை செய்து கட்டினைப் பிரித்து பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும். 

யாத்திரை இனிய முறையில் நிறைவு பெற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் மந்திரத்தை கூறி கழற்றி சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு முன்னால் வைத்து தீபாரதணை காட்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நடுவழியில் எங்கும் மாலைகளைக் கழற்றக்கூடாது. வரும் வருடங்களில் அதே மாலைகளை பயன் படுத்தவேண்டும். 


இவ்வளவு கட்டுப்பாடுகள் எதற்காக என்றால் யாத்திரையின் நோக்கம் ஜீவாத்மாவான பக்தர்களும் பரமாத்மாவான பகவானும் ஒன்றாக ஆகவே, எனவே பக்தனின் மனமும், உடலும் பதப்படவேண்டும், தூய்மையடைய வேண்டும், மேலும் கடுமையான காடு, மலை  பயணத்திற்கு மனமும், உடலும் தயாராக வேண்டும் அதற்காகவே இந்நியமங்கள் என்பார் குருசாமி.விரத காலத்தில் அனவரதமும் ஐயனை மனதில் நினைத்துக்கொண்டிருப்பது உத்தமம்.  


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Thursday, December 7, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -8

குளத்துப்புழை பாலகன்

இப்பதிவுகளையும்  காணலாமே   :        4  5  6  7

அலங்கார வளைவு

சிரஞ்சீவியான பரசுராமர் ஐயப்பனுக்காக நான்கு முக்கியக் கோவில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் பகர்கின்றன. குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் மற்றும் சபரிமலை. ஆகிய இத்தலங்கள் நான்குமே கேரள மாநிலத்தில் ஒரே மலைத் தொடரில் அமைந்துள்ளது சிறப்பான விஷயமாகும். அவற்றுள் அடுத்து குளத்துப்புழை ஆலயத்தை அடுத்து தரிசிக்கலாம் அன்பர்களே.  இத்தலம் ஐயனின் ஆதாரத் தலங்களுள் அநாகதத் தலமாகும்
கேரளத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது இத்தலம். செங்கோட்டை - திருவனந்தபுரம்  சாலையில்     செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் பால சாஸ்தாவாக அருள் பாலிக்கின்றார். இத்தலத்திற்கு அருகில் கல்லடா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.

மனித வாழ்க்கையின் பால பருவத்தைக் குறிக்கும் தலமாக இக்கோயில் விளங்குவதால், பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல்ஆரோக்கியம் போன்ற விஷயங்களில சிறந்த பலனைப் பெற இங்கு வந்து வழிபடுவது சிறந்தது என்கிறார்கள். 

பாலகனாக ஐயன் அருள் பாலிக்கும் இத்தலத்தின்  நுழைவு வாயில்  சிறுவர்கள் நுழையும் அளவிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.  தலை குனிந்து உள்ளே செல்ல முடியும்.  இங்கு விஜயதசமி தினத்தன்று குழந்தைகளுக்கு  ‘வித்யாரம்பம்’ செய்து வைத்தால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.   குழந்தை வரம் வேண்டுவோரும் வழிபட ஏற்ற தலம் இது.

 இத்தலத்தின் தல வரலாறு. கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் இராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வரும் போது இக்காட்டில் கல்லடையாற்றின் கரையில்  தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர். உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

குளத்துபுழை ஆலயம் 

சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன. உடன் சிவபெருமானும் சீவேலி மூர்த்தியும் எழுந்தருளி அருள்  பாலிக்கின்றனர். பால சாஸ்தாவிற்கு துளசியும் சிவபெருமானுக்கு வில்வமும் சார்த்துவது சிறப்பு. 

குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். இதை "மீனூட்டு" என்றழைக்கின்றனர்.  மீனூட்டு இத்தலத்தின் ஒரு சிறப்பான வழிபாடாகும்.  ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் இவை அடித்துச் செல்லப்படுவதில்லை. இம்மீன்களை யாரும் பிடிப்பதும் இல்லை. 

அடியோங்கள் இத்தலத்திற்குச் சென்ற போது நடை சார்த்தியிருந்தது. ஆகவே கல்லடா ஆற்றில் குளித்தோம்.  ஆலயத்தை அடைய ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும் பாலத்தின் முகப்பில் அலங்கார வளைவு பக்தர்கள் அனைவரையும் வரவேற்கின்றது. 

குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். கொடி மரம் இல்லை. பலி பீடம் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ளது. நமஸ்கார மண்டப கூரையில் நவகிரக சிற்பங்கள், யானை குதிரை வாகனங்கள் உள்ளன. துவாரபாலகர்கள் கோரைப்பற்களுடன் அமைந்துள்ளனர். அவர்களின் காது குண்டலமாக யானை மற்றும் இவர்களின் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துகின்றது.  நடுவில் சதுர வடிவ  ஸ்ரீகோவில் (கருவறை)  சுற்றி மரத்தாலான சாய்ந்த  கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். விளக்கு மாடத்துடன் கூடிய சுற்றம்பலம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார். திருக்கரங்களில் வில், அம்பு ஏந்தி மகிஷியை  கொல்ல காட்டுக்குள் சென்ற கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 

மச்சக்கன்னிகள்

பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறை  பகவதி, பிரயோக சக்கரத்துடன் மஹா விஷ்ணு,  பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன. குழந்தைகளின் கல்விக்காக பலர் நீராஞ்சனத்திற்கு பணம் கட்டியதை கவனித்தோம். 

சித்திரை விஷு மகோத்சவம் இத்தலத்தில் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது.  கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்குச் சென்று வரும் பக்தர்கள் இங்கும் வந்து செல்வார்கள். தை மாதம் முதல் தேதி மகர விளக்கு வைபவமும் மிக விமரிசையாக நடைபெறுகின்றது.. 

அடர்ந்த கானகத்தில் அருமையான பசுமை சூழ்ந்த பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. தென்மலை அணை அருகில் அமைந்துள்ளது.  மேலும் இத்தலத்தைச் சுற்றி 1000 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பாதுகாப்பு வனச்சரகமும் அமைந்துள்ளது. ராக் வுட் எஸ்டேட் மற்றும் செந்தூரணி காட்டுயிர் சரணாலயம்,  போன்ற முக்கிய சுற்றுலா அம்சங்களும் குளத்துப்புழாவுக்கு அருகில் அமைந்துள்ளன. சமயம் கிடைக்கும்  போது சென்று தரிசியுங்கள். 

********
பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை `பால்ய பருவம்'. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத்தை விளக்கும் திருத்தலம் குளத்துப்புழா. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள பருவம் `யௌவன பருவம்.' இப்பருவத்தை விளக்கும் தலம், ஆரியங்காவு. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயதுவரை `   கிருஹஸ்த பருவம்' இப்பருவத்தை விளக்கும் தலம் அச்சன்கோவில். ஐம்பத்தொரு முதல் எண்பத்தைந்து வயது வரை, `வானப்பிரஸ்தம்' இப்பருவத்தை விளக்கும் தலம் சபரிமலை. எண்பத்தாறு வயது முதல் ஏகாந்த' நிலை - காந்தமலை .இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளை விளக்கும் தனது அவதாரங்களாக சுவாமி ஐயப்பன் எழுந்தருளியுள்ள கோவில்கள் என்பர் பெரியோர்.


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Monday, December 4, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -7

ஆரியங்காவு அய்யன்

இப்பதிவுகளையும்  காணலாமே   :        4  5  6  8ஐயப்ப சுவாமியின் ஆதாரத்தலங்களில் மணிபூரகத்தலமான ஆரியங்காவு  தலத்தை இப்பதிவில் தரிசிக்கலாம்.  கேரள மாநிலத்தில் ,  கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு  எனும் சிற்றூரில் உள்ள இக்கோவில், கொல்லத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது. திருவனந்தபுரம் -  தென்காசி  நெடுஞ்சாலையில்  இத்தலம் அமைந்துள்ளது. . தமிழக கேரள எல்லைக்கு அருகில் உள்ள  செங்கோட்டையிலிருந்து  சுமார் 23 கிமீ தூரத்தில் உள்ளது.

ஐயன் என்றால் உயர்ந்தவர் என்று பொருள் அது போலவே ஆரியன்  என்றாலும் உயர்ந்தவர் என்று பொருள். காவு என்றால் சோலை என்று பொருள்.  எனவே ஆரியங்காவு என்றால் உயர்ந்தவன் வசிக்கும் சோலை ஆகும். இத்தலத்தில் ஐயன் இல்லறவசியாக புஷ்கலை என்ற  மனைவியுடன் யானை மேல் ஒரு காலை மடக்கி  ஒய்யாரமாக  அரசன் போன்று அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். எனவே ஐயன்  மதகஜ ராஜ ரூபன் என்றழைக்கப்படுகிறார்.  இவருக்கு வலப்பக்கத்தில் லிங்க வடிவில்  சிவபெருமானும், இடப்பக்கத்தில் புஷ்கலா தேவியும் அருள்பாலிக்கின்றார். இடப்புறம் காவல் தெய்வமான கருப்பசாமியும், கருப்பாயி அம்மையும் அருள் பாலிக்கின்றனர். .இண்டிலியப்பனுக்கு தனி சன்னதி உள்ளது. 

ஐயன் புஷ்கலையை மணந்த வரலாறு: 

மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவர். அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப்படி தந்தையும், மகளும் கோயிலில் தங்குகின்றனர். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள்.  
மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல புஷ்கலை மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாக பிடிவாதமாக கூறுகின்றாள், தந்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்கவில்லை. நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லினாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின்  மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளை கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.
ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த வணிகன் மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான் அந்த வேடன்.
அவனுக்குப் பரிசாக வணிகர் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, "நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான்.
இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய் ! வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார்.
"உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும் போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.   
மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்பும்போது, ஆரியங்காவு கோயிலை அடைகிறார். மகள் அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார்.
தூக்கத்தில்  ஐயப்பன் கனவில் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி.
காலையில் கோயிலை திறந்து ஐயன் சந்நிதியை பார்த்தார்கள். என்ன அதிசயம்! காட்டில் வேடனுக்கு வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் காணப்பட்டது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.

கோயில் சாலையை விட்டு கீழே அமைந்துள்ளது. தமிழக  கேரள எல்லையில் உள்ளதாலோ என்னவோ ஆலயமும், பூஜை முறைகளும் இரண்டும் கலந்தவாறே உள்ளது.  ஐயனின் ஸ்ரீகோவில்(கருவறை) கேரள பாணியில்  உள்ளது எதிரே நமஸ்கார மண்டபத்தில்  ஐயனின் குதிரை மற்றும் யானை வாகனங்களை தரிசிகின்றோம். மஹா மண்டபம் நீளமாக அமைந்துள்ளது. கருவறைக்கு பின் புறம் தமிழக பாணியில் கற்றூண்களுடன் திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. . இக்கோவிலின் உள்ளே வந்து 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் உள்ளே வந்து தரிசிக்க அனுமதி இல்லை.


திருக்கல்யாண மண்டபம் 


அடியோங்கள் சென்ற சமயம்  மாலை நேரம் ஐயன் அருமையாக விபூதி அலங்காரத்தில் தரிசனம் கொடுத்த்ருளினார். ஐயனின் ஜடாமுடி அப்படியே தழைய தழைய தொங்குவதை   அருமையாக தரிசித்தோம். தீபாராதனையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. தினசரி பூசைகள் கேரள முறையில் நடைபெறுகின்றது. ஆனால் உற்சவங்கள் தமிழக முறையில் நடைபெறுகின்றன. 

 மண்டல பூசை காலத்தில் அதாவது மார்கழி மாதத்தில் ஐயனின் திருக்கல்யாண உற்சவம்  பத்து நாள் உற்சவமாக சிறப்பாக  நடைபெறுகின்றது. முதல் நாள் கொடியேற்றம், தினமும் சிறப்பு தீபாராதனை மற்றும் சப்பர பவனி நடைபெறுகின்றது. திருகல்யாணத்திற்கு  . பெண் வீட்டார் சார்பில் மதுரையை சார்ந்த சௌராஷ்டிர இனத்தவர்கள், மாம்பழத்துறை பகவதி ஆலயத்தில் இருந்து அம்பாளை ஜோதி வடிவாக ஆரியங்காவிற்கு மேளதாளம் முழங்க அழைத்துச் செல்கின்றனர். . ஜோதி வடிவமான புஷ்கலா  அம்பாளை கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபடுகின்றனர். மறு நாள் இரவு  பாண்டி முடிப்பு  என்னும்   நிச்சயதார்த்தம் நடைபெறுகின்றது அன்று  தாலிப்பொலி ஊர்வலத்தில் ( மாப்பிளை அழைப்பு) ஐயன்   இராஜ அலங்காரத்தில் பவனி வந்தருளுகின்றார். 


திருக்கல்யாணத்தன்று காலையில் ஊஞ்சல் உற்சவம், வஸ்திரப் பொங்கல் படைப்பு, மாலை திருவிளக்கு பூசை, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நள்ளிரவு திருக்கல்யாணம், ஐயனும் அம்பாளும் திருவீதி உலா வந்தருளுகிறனர். மறு நாள் கலச பூசை, களாபிஷேகம் அலங்கார  தீபாரதனையுடன்  மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகின்றது.  சமயம் கிடைத்தால் ஐயனை சென்று தரிசித்து விட்டு வாருங்கள். குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பாஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .


Monday, November 27, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா 6

அச்சன் கோவில் அரசன் இப்பதிவுகளையும்  காணலாமே   :  1  2  3  4  5  7  8
பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா

அச்சன்கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா
பச்சை மயில் ஏறும் பன்னிருகையன் சோதரா
இச்சை கொண்டேன் உன்னிடத்தில் ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணன் பரந்தாமன் மகிழும் பிரபோ ....

என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள் வாருங்கள் இப்பதிவில் அந்த அச்சன் கோவில் அரசனை தரிசிக்கலாம். 


கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையில் பள்ளிவாசல்  ஆற்றங்கரையோரத்தில்   அமைந்துள்ள  அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஆலயம்  பரசுராமரால்   தோற்றுவிக்கப்பட்ட  ஐந்து  கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் ஐயனின் ஆதாரத் தலங்களில் சுவாதிஷ்டானத் தலம் ஆகும்.  இங்குள்ள சாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே ஐயப்பன்  வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இத்தலத்தில் சாஸ்தா மணிகண்ட முத்தையன் என்றும் அழைக்கப்படுகின்றார்.  இரு மனைவியருடன் இல்லறத்தானாக அருள் பாலிப்பதால் இவர் கல்யாண சாஸ்தா என்றும்  அழைக்கப்படுகின்றார். இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும். இல்லறம் நல்லறமாகும். சந்ததிகளும், சவுபாக்கியங்களும் என சகலமும் நம்மை வந்தடையும். 

இத்துதலம் விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பு கொண்டது. பாம்பு கடிபட்டு வருபவர்களுக்கு,  நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம். தீர்த்தம் தெளித்தவுடன் விஷம் நீங்கும் அதிசயம் நடைபெறும் தலம், 

அச்சன் கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன், குளத்துப்புழாவில் குழந்தை பருவத்திலும், ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும், அச்சன்கோவிலில் முதிர்ச்சிப் பருவத்திலும் காட்சி தருகிறார்.  

                                   

அலங்கார நுழைவு வாயில் 


செங்கோட்டையிலிருந்து  30 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  பொதுவாக மகரஜோதியன்று காலை இத்தலத்தில் இருக்குமாறு குருசாமி அவர்கள் எங்கள் யாத்திரையை  அமைப்பார்.  எருமேலியிலிருந்து பெரிய பாதை வழியாக சபரிமலை சென்று ஐயனை தரிசித்து நெய்யபிஷேகம் செய்து பின் கீழிறங்கி இரு நாட்கள் கேரள மற்றும் தமிழக ஆலயங்களை தரிக்க அழைத்துச்செல்வார், சொரிமுத்து ஐயனார் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார் ஜோதிக்கு  முதல் நாள் வழியில் உள்ள கருப்பண்ணசாமி ஆலயத்தை  தரிசித்து விட்டு  நள்ளிரவு அச்சன் கோவிலை அடைவோம்.  பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக  மண்டபம் அமைத்துள்ளனர் அதில் உறங்குவோம். அதிகாலை எழுந்து ஐயனின் ஆலயத்தை அங்குலம் அங்குலமாக தரிசிப்போம். அனைத்து பூஜைகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்.  எதிரே உள்ள கருப்பசாமி  சன்னதிக்கு சென்று காப்புக் கயிறு கட்டிக்கொள்வோம்.  பிறகு காட்டுப்பாதையில் கோணி பட்டணந்திட்டா வழியாக குமுளி செல்லும் பாதையில் உள்ள பீர்மேடு என்ற கிராமத்தில் உள்ள பருந்துப்பாறை என்ற மலை உச்சியில் இருந்து ஜோதி தரிசனம் செய்வோம். இப்பாதையில் செல்லும்  போது ஓர் கிராமத்தில் இறங்கி ஆற்றில் ஆனந்தமாக நீராடுவோம். யானைகளின் நடமாட்டமுள்ள பகுதிதான் ஆனால் இதுவரை யானைகளைக் கண்டதில்லை. ஆனால் காட்டுக்கோழிகள், வாலாட்டி குருவிகள், குரங்குகளை கண்டிருக்கிறோம். 

ஆலய முகப்பு  - பதினெட்டாம் படிகள்

அலங்கார வளைவிற்குள் நுழைந்து ஆலயத்தின் முகப்பை அடைந்தால் சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் பதினெட்டுப் படிகளின் இரு பக்கமும்  பெரிய கடுத்தசாமி மற்றும் சிறிய கடுத்தசாமி சன்னதிகள் மூன்று கல் விளக்குகள். பதினெட்டாம் படி ஏறி சென்றால்  பிரம்மாண்ட பித்தளை நிலவிளக்கு அதையடுத்து தங்கக்கொடிமரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது.  நிலவிளக்கின் பீடம்,  கூர்ம பீடமாக  எழிலாக அமைந்துள்ளது எட்டு திசைகளிலும் நாகங்களும் அருமையாக அமைந்துள்ளது.  கொடி மரத்தின் தாமரை பீடத்தின் மேல் அஷ்டதிக்பாலகர்கள் எழிலாக அருள் பாலிக்கின்றனர். 

நிலவிளக்கின் கூர்ம பீடம் 


கொடி மரத்தின்  அஷ்டதிக் பாலகர்கள் 


முகப்பு மண்டபம் 


இவ்வாலயம் கேரள ஆலயம் போல் இல்லாமல் திராவிட பாணியில் அமைந்துள்ளது. ஜன்னல்களுடன் கற்றளியாக அமைந்துள்ளது. முன் மண்டபம்  தூண்களுடன் அமைந்துள்ளது. தூண்களை  யாணைகள் தாங்குகின்றன. தூண்களில் அருமையான கற்சிற்பங்கள் அமைந்துள்ளன.  கருவறை பிரமிட் வடிவத்தில் இல்லாமல் நம் ஆலயங்களின் விமானம் போல் சுதை சிற்பங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்தன்மையாக உள்ளது. 

வெளிப்பிரகாரத்தில் கன்னி மூல கணபதி,  சங்கு சக்கரங்களுடன் சதுர்புஜராக ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, சிவன் மற்றும் மாம்பழத்தறா பகவதி சன்னதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத் துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன் கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான்.

                                 
                                                       தூண்களைத் தாங்கும் யானைகள் 

                                            
தூணில் உள்ள தர்மசாஸ்தா சிற்பம் 

விமானம் 

 உட்பிரகாரத்தில்  நமஸ்கார மண்டபத்தில் குதிரை வாகனம் அமைத்துள்ளனர்.. கர்ப்பகிரகத்தின் சுவரில் சாஸ்தாவின் சிற்பங்களை தரிசிக்கலாம்.  கர்ப்பகிரகம் உயரமாக அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்துடன் அர்த்த மண்டபம் உள்ளது. நீராஞ்சனம் என்னும் தேங்காயில் விளக்கு ஏற்றும் பிரார்த்தனை விளக்குகள் இம்மண்டபத்தில் தான் ஏற்றப்படுகின்றன. நீராஞ்சன கட்டணம் வெறும்  இரண்டு ரூபாய்தான், அலுவலகத்தில் சீட்டு வாங்கிக் கொண்டு தேங்காயும் வாங்கிக்கொடுத்தால் தந்திரி விளக்கேற்றுகிறார். பலர் இத்தலத்தில் இவ்வழிபாட்டை செய்வதைக் கண்டேன்.   

கருவறையில் எழிலாக தேவியருடன் வலதிருக்கரத்தில் அமுத கலசம் தாங்கி ஒரு காலை  மடக்கி ஒரு காலை குத்துக்காலிட்டு எழிலாக அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார் ஐயன். ஹரியும் அழகு, ஹரனும் அழகு, இரு அழகுக்கும் பிறந்த ஹரிஹரசுதன் அழகனாக இருப்பதில் என்ன ஆச்சரியம்.  தேவியர் இருவரும்  மலர் தூவும் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.  பொதுவாக மகரஜோதியன்று தரிசனம் செய்வதால் சிறப்பு அலங்காரத்தில் தரிசிக்கும் பாக்கியம் அடியோங்களுக்கு கிட்டியது. உடன் சீவேலி மூர்த்தியையும் தரிசிக்கின்றோம். 


நாக யக்ஷி சன்னதியிலிருந்து விமானத்தின் எழில் தோற்றம் 

கன்னிமூல கணபதி சன்னதிஆலயத்தின் பின்புற வாசல் 

ஆலயத்தின் பின் புற வாசல் வழியாக வெளியே சென்றால் யக்ஷிக் காவையும், சர்ப்பக்காவையும் தரிசிக்கலாம்.  ஆலயத்தை விட உயரத்தில் இவ்விரண்டு காவுகளும் அமைந்துள்ளன.. இந்த யக்ஷி சாஸ்தாவின் சன்னதியில் விளையாடி வரும் இராஜமாதங்கியாவாள்,  இவ்வமைக்கு வெறிக்கலி என்றொரு பெயரும் உண்டு.  ஒரு சமயம்  இவள் உக்ரரூபிணியாக மக்களை துன்பப்படுத்திய சமயம் ஐயப்பன் ஸ்வர்ண சங்கிலியால் பந்தனப்படுத்தி அவளது தெய்வாம்சத்தை நினைவு படுத்தி, தன் பரிவாரங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். இவளுக்கு மஞ்சளும் குங்குமமும் தூவி இங்குள்ளவர் சிறப்பாக வழிபடுகின்றனர். சர்ப்பக்காவில்  அரச மரத்தினடியில் எண்ணற்ற நாகர்கள் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளனர். நாகர்களுக்கும் மஞ்சள் பூசி வழிபடுகின்றனர். 

கொச்சு சாமி 


சர்ப்பக்காவு
ஒருமுறை அச்சன்கோவில் அழகனை காண்பதற்காக தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனித்து வந்து கொண்டிருந்தார். அடர்ந்த காடு, நேரமோ இரவாகி விட்டது. வழியும் சரியாக தெரியவில்லை. மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்கு, அந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டு விட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும் ஐயப்பனை நினைத்து பயத்தைப் போக்க வேண்டிக் கொண்டார். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘அன்பனே! இப்போது இவ்விடத்தில் வாள் ஒன்று தோன்றும். அந்த வாள் உனக்கு வழிகாட்டும். அச்சன்கோவில் அடைந்ததும் அந்த வாளை எனது சன்னிதியில் கொடுத்து விடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாது’ என்றது அந்த அசரீரி. அதன்படியே அங்கு தோன்றிய வாள் பவுர்ணமியை காட்டிலும் அதிக ஒளி காட்டியது. அந்த ஒளியின் மூலமாக காட்டுப்பாதையில் அந்த நள்ளிரவில் நடந்து வந்து கோவிலை அடைந்தார் முதியவர். மறுநாள் விடிந்ததும், அந்த வாளை கோவிலில் ஒப்படைத்து   விட்டு நடந்தவற்றை விளக்கி கூறினார். அப்போது கருவறையில் இருந்து அசரீரி ஒலித்தது. ‘அன்பர்களே! அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்’ என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன் கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாள் கருப்பனின் வாள் என்பது ஐதீகம், அச்சன்கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள்  ‘மண்டல மகோத்சவம்’ வெகு சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்விழா மார்கழி மாதம் முதல் நாளன்று துவங்குகின்றது.  இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறுகின்றது.. புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள்   அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், வாள் முதலியன உள்ளன.

இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கி,  தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது.  அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்குகின்றது.

.மூன்றாம் திருநாள்  உற்சவத்தில், சிறிய தேரில் வர்ண ஆடை ஆபரணங்கள் அணிந்து, வாள்  கையிலேந்தி தர்மசாஸ்தா வலம் வந்தருளுகின்றார். இதை மணிகண்டமுத்தய்ய சுவாமியின் எழுந்தருளல் என்பர். ஒன்பதாம் உற்சவத்தின் போது, சக்கரங்கள் கொண்ட பெரிய ரதத்தில் எழுந்தருளுவார். தை மாதத்தில் ரேவதியன்று  சிறப்பு புஷ்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 

                                                     கருப்பசாமி ஆலயத்தின் அருகில் குழுவினர் இத்தலத்தின்  காவல் தெய்வம் கருப்பசாமி ஆவார். ஆலயத்திற்கு எதிரே தனி சன்னதியில் கருப்பாயி அம்மையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவரை முதலில் வணங்கி விட்டு 

பின்னர் தர்ம சாஸ்தாவை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோ, தீராத கொடு நோயாலோ அவதிப்படுபவர்கள், இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்து துயரங்களும் நீங்கப்பெறுவார்கள். இந்த விழாவின் போது பலரும் கருப்ப சுவாமி போல் வேடம் அணிந்து  கலந்து கொள்கின்றனர். .


  
                                                                            குருசாமியுடன் குழுவினர்    
கருப்பண்ணசாமிக்கு இத்தலத்தில் இவ்வளவு சிறப்பு ஏன் என்று நினைக்கின்றீர்களா.?  அச்சன்கோவில்  அனைத்தும்  கருப்பனின் கோட்டை என்பது ஐதீகம். இதை உணர்த்தும் வகையில் ஒரு விளையாடல் இத்தலத்தில் நடைபெற்றது. ஒரு வருடம் திருவிழாவின் போது திருவாபரணப்பெட்டி ஆலயத்தில் இருந்தது. சில திருடர்கள் இரவோடிரவாக திருவாபரணப் பெட்டியை திருடிக்கொண்து சென்று விட்டனர். மறு நாள் காலை மேல் சாந்தி  வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டார். செய்தி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் ஒருவர்  வேடிக்கையாக அச்சன் கோவில் காடு அனைத்தும் கருப்பனின் காவல் என்பார்களே எவ்வாறு இப்படி நடந்திருக்கமுடியும் என்று ஏளனமாக கூறினார். அப்போது கூட்டத்தினரில் ஒருவர் மேல் கருப்பசாமி எழுந்தருளி, என் ஆதிக்கத்தில் திருட்டு நடைபெறாது என்று முழக்கமிட்டார். காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக்கூறி  அங்கு சென்று பார்க்குமாறு உத்தரவிட்டார். . அங்கு சென்று பார்த்தபோது  இரவு திருவாபரணப் பெட்டியைத் திருடிய கள்வர்கள் பெட்டியை ஒரு மரத்தடியில் வைத்து விட்டு என்ன் செய்கின்றோம் என்று அறியாமல்  மரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஐயனின் ஆபரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. திருடர்களும் மனம் திருந்தி ஐயனுக்கு கைங்கர்யம் செய்து வரலாயினர்.

அச்சங்கோவிலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கோட்டை கருப்பணசாமி கோயில். இந்தக் கருப்பணசாமி, சிவனின் அம்சத்திலிருந்து வந்தவர். ஐயப்பனின் படைத் தளபதிகளில் முக்கியமானவர். இந்தச் சந்நிதிக்கு வந்து  கருப்பணசாமியிடம் நாம் எந்த வேண்டுதல் வைத்தாலும், அதை ஐயப்பனின் முன் வைத்ததற்குச் சமம்!

 இவ்வளவு சிறப்புப் பெற்ற அச்சன் கோவில் அரசனை சமயம் கிட்டும் போது சென்று தரிசித்து விட்டு வாருங்கள். 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .